மகாகவி பாரதியார்
(வ.ரா.)

                 
6

1904ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பாரதியார் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார். பாரதியாரின் வாவைத் தொகுத்துச் சொல்லுகையில் வருஷப் புள்ளியில் சில சில்லறைத் தவறுகள் இருக்கலாம். இதைப்பற்றித் தெரிந்தவர்களிடம் நான் எவ்வளவே விசாரித்துப் பார்த்தேன். என்னைப் போலவே அவர்களுக்கும் சந்தேகம். நமக்குச் சந்தேகமாயிருக்கும் வார்த்தையே அகராதியில் இருப்பதில்லை என்பதை அனுபவ மூலமாய் நீங்கள் அறிந்திருப்பீர்கள். என் கதியும் அப்படித்தான்.

‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராக அமர்ந்த பாரதியார், கஜானாவைப் பார்த்து அதைப் பெற்றுவிட்டதாக எண்ண வேண்டாம். சம்பளம் ரொம்பக் குறைவு. வேலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. “பாரதி, நீ அருமையாகத் தமிழ் எழுதுகிறாய். உனக்கு அட்சர லட்சம் கொடுக்கலாம். நீ காளிதாஸன்தான். ஆனால், நான் போஜ ராஜனில்லையே! உனக்குத் தகுந்த சன்மானம் செய்ய என்னிடம் பணமில்லையே!” என்று சுப்பிரமணிய அய்யர் பாரதியிடம் சொல்லுவாராம்.

“நயமாய் என்னை ஏய்த்து வேலை வாங்குவதில் !சுப்பிரமணிய அய்யர்; ரொம்பக் கொம்பன்; என்றாலும், பத்திரிகைத் தொழில் எனக்குப் பழக்கமும் தேர்ச்சியும் வரும்படி செய்தவர் அவர்தான். அவரை நான் ஒரு வகையில் பரம குருவாக மதிக்கிறேன்.” என்பார் பாரதியார்.

ஒரே ஒரு நிகழ்ச்சியைப்பற்றி, பாரதியார் அடிக்கடி சொல்லுவதுண்டு. இந்த நிகழ்ச்சியை, அநேகமாய்ப் பாரதியார் என்னிடம் சொன்னது போலவே சொல்லிவிடுகிறேன்.

“சாயங்காலம் ஆபீசிலிருந்து வீட்டுக்பப் போகலாம் என்று யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். பணமுடையால், ‘அய்யரைப் பணம் கேட்கலாமா, வேண்டாமா’ என்று ஆலோசனை செய்துகொண்டிருக்கிற சமயத்தில் ‘அய்யர் உங்களுக்குக் கொடுக்கச் சொன்னார்’ என்று ஒருவன் திடீரென்று ஒரு டம்ளர் காப்பி கொண்டுவந்து கொடுப்பான், அய்யருடைய அன்பைப் பற்றி நினைத்து, பிரம்மானந்தப்பட்டுக்கொண்டிருப்பேன். இந்தச் சமயத்தில் அய்யர் வந்து தோன்றுவார். அவரைப் பணம் கேட்க வேண்டுமென்று நினைத்த நினைப்பே போய்விடும்.”

“பாரதி! ஸர் ஹென்றி காட்டன் இந்தியாவைப்பற்றி உருக்கமாகச் சீமையில் பேசியிருக்கிறாரே, அதைப் பார்த்தாயோ?” என்பார். “ஆமாம், பார்த்தேன்; நன்றாய்ப் பேசியிருக்கிறார்” என்பேன். “அதை நாளைக்கே நம்ம பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாமா?” என்பார். “கட்டாயம் பிரசுரிக்க வேண்டும்” என்பேன்.

“அந்தப் பிரசங்கத்தின் ரஸம் கெடாமல் தமிழில் மொழி பெய்ர்க்க உன்னைத் தவிர யாரால் முடியும்?” என்பார் தலை குனிந்துகொண்டு நிற்பேன்.

“அதை நீ ஆபீசிலே மொழிபெயர்க்க வேண்டுமென்கிற அவசியமில்லை. வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் தர்ஜமா செய்து, நாளைக்குக் காலமே நீ வருகிறபொழுது கொண்டுவந்தால் போதும். வீட்டிலே விளையாட்டுப்போல மொழிபெயர்த்துவிடலாம்; அரை மணிகூடப் பிடிக்காது உனக்கு” என்பார் அய்யர்.
“அதை எடுத்துககொண்டு வீட்டுக்குப் போவேன். எனக்கு ஆபீசிலே மட்டும் வேலையா? தாலுகா கச்சேரி குமாஸ்தாவைப் போல வீட்டிலேயும் வேலை! கூலிக்கு உழைக்கின்றவர்களின் கதி இதுதான்.”

இவ்வாறு பாரதியார் சொல்லிவிட்டு, “அய்யர் என்னை அன்பைக் கொண்டு ஏய்த்தது உண்மை; என்றாலும், இந்த மொழிபெயர்ப்பு வேலை எனக்கு எவ்வளவு ஒத்தாசை செய்தது தெரியுமா? இங்கிலீஷ் ரொம்ப நயமான பாஷையானதால், இங்கிலீஷ் எழுத்தின் கருத்துச சிதைந்து போகாமல், தமிழர்களுக்கு அதை ஸ்வாரஸ்யமாய்ச் சொல்லும்பொருட்டு, நேரான தமிழ்ச் சொற்களை நான் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. தமிழ்ப் பாஷையின் கம்பீரமும் ரஸமும் அப்பொழுது எனக்கு இன்னும் தெளிவாகத் தெரிந்தன” என்பார்.

தமிழுக்குப் புதிய உயிர் கொடுத்து அதைப் புதுமொழியாக்கிய பாரதியார், சுதேசமித்திரன் ஆபீசில் மொழிபெயர்ப்பு வேலை செய்தது நமக்கு ஆச்சரியமாயிருக்கலாம்.

“அய்யர், பாரதியாரைத் தலையங்கம்ள எழுதும்படி விட்டதில்லையாம். அரசியலில் பாரதியார் அதி தீவிரவாதி என்ற சாக்கே தலையங்கம் எழுதாதபடி அவர் தடுக்கப்பட்டதற்குக் காரணமாயினும், வேறு விஷயங்களப்பற்றிக்கூட, பாரதியார் சொந்தமாகக் கட்டுரைகள் எழுதும்படியாக விடப்பட்டதில்லையாம்.

தினசரி பத்திரிகைகளுக்குத் தந்தி, வெளியூர் வர்த்தமானம் இவைகளிலேதான் நாட்டம். மனிதர்களின் பாழடைந்த கருத்துகளை மாற்டிற, அவர்களை வலியோர்களாய்ச் செய்யும் வேலையில் தினசரிகள் பெரும்பாலும் இறங்குவதில்லை. மேலும் இதற்குப் போதுமான வசதிகளும் நேரமும் அவைகளுக்கு இருப்பதில்லை.

இந்தக் குறையைத் தெரிந்துகொண்டே, காலஞ்சென்ற லோகமான்ய திலகர் தமது கேசரி பத்திரிகையை, தமது ஆயுள் காலம் முடிய வாரப் பத்திரிகையாகவே நடத்தி வந்தார். தினசரியாக மாற்றும்படி எத்தனையோ ஆயிரம் பேர் திலகரிடம் மன்றாடிப் பார்திதார்கள். திலகர் அந்த யோசனையைத் திரும்பிக்கூடப் பார்க்க மறுத்துவிட்டார். வாரம் பத்திரிகையான கேசரி !இப்பொழுது அது வாரம் ஒரு முயைக வெளிவருகிறது; மகாராஷ்டிரர்களின் மனத்தை அடியோடு மாற்றியது போல, எந்தத் தினசரிப் பத்திரிகையாவது எந்த மாகாணத்திலேனும் மனத்தை மாற்றியிருக்கிறதா? காந்தியின் நவஜீவன் விதிவிலக்கு.

குறைந்த சம்பளம் பெற்று வந்த பாரதியார் குடியிருப்பதற்குத் தனி வீடு வாடகைக்கு அமர்த்திக்கொள்ள முடியுமா? பெரிய நகரங்களில் குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு ஒண்டிக் குடியைத் தவிர, வேறு வழி கிடையாது. இந்த நிர்ப்பந்த ஒண்டிக் குடியன் அவஸ்தைகளைப் பாரதியார், ஒப்பில்லாக் கற்பனை படைத்த ஞானரதம் என்ற தமது நூலில் அருமையாக வர்ணித்திருக்கிறார். ஒண்டிக் குடிக்காரர்களுக்கோ, ஆபீசில் ஒரு ரூபாய் சம்பளம் உயர்வதற்கு முன், வீட்டிலே இரண்டு குழந்தைகள் புரமோஷன் என்று பாரதியார் அன்பு ததும்பும் அனுதாபத்துடன் கேலி செய்திருக்கிறார். வாழ்வைக் கெட்டிப்படுத்தி, சக்தி உயர்வைப் பெருக்கும் விகடம் இதுதான்.

இந்த காலத்திலே பாரதியாருக்குப் பலர் நண்பர்களானார்கள். முக்கியமான சிலரின் பெயர்களை மட்டும் இங்குக் குறிப்பிடுகின்றேன். இவர்கள் அனைவரும் பாரதியாரின் உயிர்த்தோழர்கள் பாரதியாரின் கவிதை வல்லமையில் மோகங்கொண்டவர்கள். எஸ்.துரைசாமி அய்யரைத் தலைமையாகச் சொல்ல வேண்டும். இந்தக் காலத்திலும், பாரதியாரின் பிற்காலத்திலும், அவருக்குக் கள்ளங்கபடு இல்லாமல் உதவி செய்து, இப்பொழுதும் பாரதியாரைப்பற்றிப் பேசினால், நெஞ்சு கசிந்தும் கரைந்தும் கண்ணீர் விடுபவர் துரைசாமி அய்யர். துரைசாமி அய்யரின் அதிசூட்சுமமான புத்தியையும், அளவுக்கு மிஞ்சிய உதார குணத்தையும், அதை வெளியிலே டம்பமாய்ப் பேசிக்கொள்ளக் கூச்சப்படும் உண்மையான அடக்கத்தையும், தமிழர்களின்மீது அவருக்கு இருக்கும் அபார வாஞ்சையையும் குறிப்பிட இது சந்தர்ப்பமல்ல.

“மீசையிலே பெருமை கொள்ளாதே, மூடா வரால் மீனுக்கும் நீண்ட மீசையிருக்கிறது. வரால் மீன் எதற்காகும்? மாமிசம் ச்ப்பிடுவோருக்கு ஆகாரமாகும். அது போலவே, உங்கள் அடக்கியாளும் அதிகார வர்க்கத்தினருக்கு ஆகாரமாகச் சமைவதற்காகவா உங்களுக்கு மீசை?” என்று அந்நாள்களிலே வீரகர்ஜனை செய்த சுரேந்திரநாத் ஆர்யா என்ற தெலுங்கர், பாரதியாரின் அரிய நண்பர். அவர் வெல்லச்சைப்போல உடல் கெட்டியையும், ஜப்பானியனைப் போலக் குட்டையான உருவத்தையும் பெற்றவர். ஆறு வருஷம் கடுங்காவல் பெற்றவர். டேனிஷ் மிஷன் பாதிரியார்களின் அன்புக்கு மிகுதியும் பாத்திரமான இவர் கிறிஸ்தவரானார். சிறிது காலம் இவர் சுயமரியாதைக் கட்சியில் ஈடுபட்டு உழைத்தார். எதிலும் உற்சாகமும் ஊக்கமும் நிறைந்தவர்.

மூன்றாவது நண்பர் ஸ்ரீமான் வி.சர்க்கரைச் செட்டியார். இவர் கிறிஸ்தவர். ரொம்ப மதபக்தி கொண்டவர். தேசிய இயக்கத்தின் தத்துவத்தை முற்றிலும் அறிந்தவர். நல்ல இலக்கியத்தில், சுவையுளள புதுக் கருத்துகளில் அபரிமிதமான மோகம் கொண்டவர். மனத்தில் உறுதி மட்டும் அவ்வளவாகப் போதாது. என்றாலும், பெரு நோக்கிலே இவருக்கு எப்பொழுதும் திருஷ்டி உண்டு. சென்னை நகர மேயர் பதவிக்கு ஒரு வெள்ளைக்காரரோடு போட்டி போட்டு இவர் தோற்றது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தத் தோல்வி ஜஸ்டிஸ் கட்சியார் கைவிட்டதன் பயனாகும். பின்னர் இவர் சென்னை மேயரானார்.

நான்காவது, மண்டையம் எஸ்.என்.திருமலாச்சாரியார். ரொம்பப் பணக்காரர். முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே மாண்டு போனார். உடல் வலிமை கொண்ட உற்சாக புருஷர். இவர் இறப்பதற்கு முன்னமே தமது செல்வத்தின் பெரும்பகுதியை வேட்டு விட்டுவிட்டார். பாரதியார் பின்னால் நடத்திய இந்தியா என்ற வாரப் பத்திரிகைக்கு மிகுதியும் பொருள் உதவி செய்தவர். இவருக்கு உறவினரான எம்.பி.திருமலாச்சாரி என்ற இன்னொடு திருமலாச்சாரி, பாரதியாரின் நண்பர்களில் ஒருவர். இவர் ஐரோப்பாவில் வெள்ளைக்காரப் பெண் ஒருத்தியை மணந்துகொண்டிருப்பதாகக் கேள்வி. பலாத்காரப் புரட்சி இயக்கத்தில் கலந்துகொண்டு இந்தியாவுக்கு வர முடியாத நிலைமைக்குத் தம்மை ஆளாக்கிக்கொண்டார். என்று சொல்லப்படுகிறது.

மண்டையம் சீனுவாஸாச்சாரியார் இன்னொரு நண்வர். இவர் இப்பொழுது திருவல்லிக்கேணியில் இருக்கிறார். ரொம்ப நல்லவர். இவருடைய குடும்பத்துக்கு, தூத்துக்குடி சுதேசிக் கப்பல் கம்பெனி மூலமாய் ஏற்பட்ட நஷ்டத்தை லட்சக்கணக்கில் சொல்லலாம். சென்னையிலும் புதுச்சேரியிலும் சுமார் இருபது வருஷங்களுக்கு அதிகமாக, பாரதியாரோடு நெருங்கிய நட்புக்கொண்டவர். இந்தியா பத்திரிகையின் சொந்தக் காரர்களில் ஒருவர். தமிழ், கன்னடம், உருது, பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலிய பாழைகளில் நிபுணர்.

டாக்டர் எம்.ஸி.நஞ்சுண்டராவ் என்ற பேர்போன டாக்டர் ஒருவர் மயிலாப்பூரில் வசித்துவந்தார். வயதிலே பாரதியாருக்கு ரொம்பப் பெரியவர். ரொம்ப தீரர். உயர்ந்த நேசபக்தர். பரம தயாளு. தத்தளித்து வாழுத் தெசபக்தர்களுக்கு இவர் சொல்லிய யோசனைகளையும், செய்த உதவியையும்பற்றி என்னவென்று எழுதுவது? பாரதியாரிடம் இவருக்கு உண்டான நட்பு ரொம்ப விசித்திரம்.
பாரதியாரின் சிரிப்பு, சங்கீதத்தில் ரவை புரளுவது போன்ற சிரிப்பு. அதிர் வேட்டைப்போல் படீர் என்ற வெடிக்கும் சிரிப்பல்ல, அஅமர்ந்த சிரிப்புமல்ல, வஞ்சகத்தை உள்ளே வைத்துக்கொண்டு வாயை மட்டும் திறந்து, பல்லைக் காட்டி, சிரிப்பைப் பழிக்கும் சிரிப்பல்ல. புன்னகையைப் புஸ்தகத்திலே படிக்கலாம், ஆனால் பாரதியாரின் புன்சிரிப்பைப் பார்க்க முடியாது. சங்கீதச் சிரிப்பைத்தான் காணமுடியும்.

பாரதியாரின் இந்தச் சிரிப்பிலே ஈடுபட்டுப் போனவர் டாக்டர் நஞ்சுண்டராவ். பாரதியாருடைய அகத்தின் அழகையும், தூய்மையையும், மேன்மையையும் அவரது முகத்திலும் சிரிப்பிலும் கண்டு மகிழ்ந்தவர் நஞ்சுண்டராவ். பாரதியார் சிறிது காலம் சென்னை ஜார்ஜ்டௌனில் வசித்து வந்தார். அவருடைய மூத்த பெண் தங்கம்மாளுக்குக் காய்ச்சலும் நோயும் வரவே, டாக்டர் நஞ்சுண்டராவ் பாரதியாரைக் கட்டாயப்படுத்தி, திருவல்லிக்கேணிக்கு வந்து குடியிருக்கும்படியாகச் செய்துவிட்டார். தாம் கிட்டேயிருந்து, குழந்தை தங்கம்மாளுக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்பது நஞ்சுண்டராவின் ஆவல். நஞ்சுண்டராவுக்கப் பாரதியாரிடமிருந்த அன்பை அளவிட்டுச் சொல்ல முடியாது.

இன்னும் ஒரே ஒரு நண்பர். அவர் வயதில் பாரதியாருக்கு ரொம்ப மூத்தவர். அவர் பெயரைச் சொன்னால் போலீசார் இப்பொழுது திகைத்துத் திடுக்கிடவும் கூடும். அவர் பெயர் கிருஷ்ணசாமி அய்யர். அவர் சென்னையில் போலீஸ் டெபுடி கமிஷனராக இருந்தவர். கனம் நீதிபதி கிருஷ்ணசாமி அய்யருக்கு உயிர்த்தோழர்.

பாரதியாருக்கு போலீஸ் உத்தியோகஸ்தர் கிருஷ்ணசாமி அய்யரிடம் எப்படி நட்பு உண்டாயிற்று என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. சிறந்த தேசபக்தரான பாரதியாருக்கும் சர்க்கார் மனிதரான கிருஷ்ணசாமி அய்யருக்கும் எவ்வாறு சிநேகிதம் உண்டாயிற்று என்று நம்மில் எவரும் திகைக்க வேண்டாம். காந்திக்கும் தீனபந்து ஆண்ட்ரூஸுக்கும் நட்பு ஏற்பட்ட காரணத்தையே மேற்கூறியதற்கும் சொல்லலாம். சொல்ல முடியும். பொதுவாக எந்தக் கூட்டத்துக்கும் இழிவோ பெருமையோ இருக்கலாம். அந்தப் பொதுவான நிலைமை, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த தனி நபர்களுக்கும் இருக்க வேண்டும் என்று சாதிக்க முன் வருவது தகாத காரியமாகும்.

                 
6

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur