மகாகவி பாரதியாரின் தலையங்கங்கள்

கொடிய அநீதி

ஹைகோர்ட்டில் ஸ்ரீ சங்கரன் நாயருக்கு இடந்தருவதில்லையென்று சென்னைக் கவர்ன்மெண்டார் நிச்சயித்து விட்டார்கள். இதுவரையில் ஜட்ஜியாயிருந்த பழக்கமேல்லாதவராகிய மிஸ்டர் வாலிஸை நியமித்துவிட்டார். எவ்வளவு அனுபவமுள்ள இந்தியராயிருந்த போதிலும் அவரைக் காட்டிலும் அனுபவமில்லாத ஆங்கிலேயரே விசேஷமென்று கவர்ன்மெண்டாருக்குத் தோன்றியிருக்கிறது. ஸ்ரீ சங்கரன் நாயர் இரண்டு மூன்று தடவை வேலை பார்த்து நல்ல ஜட்ஜியென்று பேர் வாங்கியிருக்கிறார். கவர்ன்மெண்டார் செய்த இந்த அவமதிப்பு சங்கரன் நாயருக்கு மட்டிலும் சேர்ந்ததென்று நினைக்க வேண்டாம்; இம்மாகாணத்து ஜனங்கள் அனைவரையும் சேர்ந்தது.

இவ்விஷயத்தில் ஒவ்வொரு ஜில்லா வாசிகளும் தமக்கேற்பட்டிருக்கும் அதிருப்தியைப் பொதுக் கூட்டங்கள் மூலமாகவும் அறிக்கைகள் மூலமாகவும் இந்தியா மந்திரிக்கு அறிவுறுத்துவார்களென்று நம்புகிறோம். இரண்டு இந்திய ஜட்ஜுகள் ஷைகோர்ட்டிலே இருக்கக் கூடாதென்பது கவர்ன்மெண்டார் நோக்கம் போலும்! ஏன் இருக்கக் கூடாது? இதற்கு முன்பு ஒரு முறை சுப்பிரமண்ய அய்யரும், பாஷ்யம் அய்யங்காரும் ஏக காலத்தில் ஜட்ஜிகளாக இருக்கவில்லையா? ஏதோ துர் மந்திரிகளின் போதனையைக் கேட்டு நமது கவர்னராகிய ஸர்.ஆ.லாலி இவ்வாறு செய்து விட்டாரென்று தோன்றுகிறது. இதற்கு முந்திய கவர்னராகிய லார்டு ஆம்ப்ட்ஹில் இப்போது கவர்னராயிருப்பாரானால் இவ்வாறு யோசனையற்ற காரியம் செய்திருக்க மாட்டாரென்று பொது ஜனங்கள் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

சமீபத்தில் ஸ்ரீ சங்கரன் நாயர் இங்கிலாந்திற்குச் சென்றிருந்தபோது அங்கே 'கான்டெம்பரரி ரெவ்யூ' என்ற ஒரு மாதாந்தரப் பத்திரிகைக்கு உபந்நியாசமெழுதியனுப்பினார். அதிலே இந்தியாவில் ஓர் வெள்ளையன் ஓர் இந்தியக் கூலிக்காரனைக் கொன்றுவிடுவானானால், அவன் தனது ஜாதிக் காரராகிய ஐரோப்பிய வர்த்தகர்கள், தோட்டக்கார முதலாளிகள் சேர்ந்த ஒரு ஜுரியொன்று வைத்துத்தான் தன்னை விசாரணை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறானென்றும், அந்த ஜுரிக்காரர்கள் எப்படியாவது திருகுதல்கள் செய்து அந்த செள்ளையனை விடுதலை செய்யவேண்டுமென்றே முயல்கிறார்களென்றும் ஒரு திருஷ்டாந்தம் வந்திருக்கும்படி எழுதினார். மற்றப்படி இந்தியாவில் ஸிவில் உத்தியோகஸ்தர்களெல்லாம் நீதி ஸ்வரூபிகளென்று ஸ்ரீ நாயர் மேற்படி உபந்நியாசத்தில் புகழ்ந்து பேசியிருந்தார். இப்போது சென்னையில் உயர்ந்த ஸிவில் உத்தியோகஸ்தர்கள் தம்மை நடத்தியிருக்கும் மாதிரியிலிருந்தேனும் சங்கரன் நாயருக்குப் புத்தி வந்திருக்குமென்றும், இனிமேல் ஸிவில் உத்தியோகஸ்தர்களைத் தர்மாத்மாக்களென்று புகழ்வதை நிறுத்திவிடுவாரென்றும் நினைக்கிறோம். இது நிற்க...

...மேற்கண்டவாறு, வெள்ளை ஜுரிகளுக்கு விரோதமாக எழுதியிருப்பதனாலேயே அவருக்கு வேலை கிடையாமற் போயிற்றென்று சென்னை பத்திராதிபர்கள் பகிரங்கமாகச் சொல்ல தலைப்பட்டு விட்டார்கள். ஆரம்பத்திலேயே இவருக்கு வேலை கொடுக்கக் கூடாதென்று சென்னை 'டைம்ஸ், அலகாபாத் பயனீர்' முதலிய பத்திரிகைகள் ஆக்ஷேபித்தன. இப்போது சென்னை மெயில் பத்திரிகை மேற்படி காரணம் பற்றியே இவருக்கு வேலை கொடுக்கப்படவில்லை என்று ருசிப்பித்துப பேசுகிறது. இதை வாசிக்கும் போது ஒவ்வோர் உண்மையான இந்தியன் மனமும் கொதித்திருக்குமென்று நம்புகிறோம். சென்னைக் கவர்ன்மெண்டார் உண்மையாகவே மேற்படி காரணத்துக்காக ஸ்ரீநாயருக்கு உத்தியோகம் சொடுக்காமல் நிறுத்தியருப்பார்களானால் அதைக் காட்டிலும் ஒரு அறிவற்ற செய்கை வேறொன்றும் கிடையாது. எனினும் இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டதை நிவர்த்தி செய்து கொள்ளும் கொருட்டாகவேனும், கவர்ன்மெண்டார் பகிரங்கமாக இந்தச் செய்கைக்கு முகாந்திரம் அறிவிப்பார்களென்று நம்புகிறோம்.
'மெயில்' பத்திரிகையின் பொறுக்கொணாத அதிக பிரசங்கித்தனம். ஸ்ரீ சங்கரன் நாயர் தாம் ஆங்கிலேயர்களைப் பற்றி எழுதியிருப்பதற்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் பக்ஷத்தில் ஒருவேளை வெள்ளையர்கள் இவரை க்ஷமித்து பின்னொரு காலத்தில் உத்தியோகம் கிடைக்கலாமென்று 'மெயில்' பத்திரிகை கூறியிருக்கிறது....

தோட்டக்கார வெள்ளையர்களும், வர்த்தக வெள்ளையர்களுமாக ஹைகோர்ட் ஜட்ஜின் நியமனத்துக்குப் பொறுப்பாளிகளாயிருக்கிறார்கள்? சுயமதியுள்ள இந்தியர்கள் இனியேனும் இதை (மெயில் பத்திரிகையை) விலக்கி வைத்து விட முயல்வார்களென்று நம்புகிறோம். இந்திய ஜனத் தலைவர்களை வைப்பு வரம்பில்லாமல் நிந்திப்பதே தொழிலாகக் கொண்ட இப்பத்திரிகைக்குச் சோறு போட்டு வளர்ப்பது மஹா மூடத்தனமான செய்கையல்லவா?

சில அறிவற்ற முகாந்தரங்கள்
ஜட்ஜிகள் ஒருவேளை நியமிக்கப்படலாமாதலால், அது பற்றியே ஸ்ரீ நாயரைப் பாக்கி வைத்திருக்கிறார்களென்றும் ஸர்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் வேலையினின்றும் நீங்கிக் கொண்டபோது ஸ்ரீ நாயர் நியமிக்கப்படலாமென்றும் சில வெறுக்கத்தக்க முகாந்தரங்கள் சொல்லப்படுகின்றன. 7 ஜட்ஜிகள் நியமனமடையும் வரை வாலஸ் 'துரை' ஏன் காத்திருக்கக் கூடாது? ஸர்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் வேலையை விட்டு விலகிக் கொள்வதில் அன்னியர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் ஏன் இருக்கவேண்டும்? ஸர்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் நேர்த்தியான சரீர நிலையும் பலமும் கொண்டிருக்கிறார். 'இவர் விலகியதற்கப்பால்' என்று மெயில் பத்திரிகை எழுதுவதே அப்பத்திரிகையின் மதிப்பின்மையை விளக்குகிறது. ஒவ்வோர் இந்தியனும் அப்பத்திரிகை ஆதரிப்பதில்லையென்று பிரதிக்கினை செய்யுமாறு மறுபடியும் கேட்டுக்கொள்கிறோம்.18.08.1906

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur