நகரத்தார்கள்
ஊர்களில் மிகச் சிறப்பு வாய்ந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில்
உள்ள கோட்டையூர். இவ்வூரில் கோடீவரர்கள் உள்ளனர். வள்ளல்
அழகப்ப செட்டியாருடைய பிறந்த ஊர். இவ்வூரில் பொருட் செல்வத்தைவிட
உயர்ந்த கல்விச் செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்தார் ஒரு
மேதை. அவர்தான் நூலக வித்தகர் ரோஜா முத்தையா செட்டியார்
அவர்கள். ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய அரிய கல்விப்
பணியை, ஆய்வுப் பணியைத் தனி மனிதனாகச் செய்த சாதனையாளர்
அவர். அவருடைய மேதையை தமிழகம் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது.
தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களும், தமிழ்நாட்டு அரசாங்கங்களும்
அந்த மேதையைகண்டு கொள்ளவே இல்லை. 1000 பக்கங்களில் எழுதப்பட
வேண்டிய வரலாறு கொண்ட அம் மேதையை மேலோட்டமாக அறிமுகம்
செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
ரோஜா முத்தையா
அவர்கள் கோட்டையூரில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் 5.6.1926
அன்று ராமனாதன் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார். அவருடன்
5 பெண்கள் பிறந்தனர். இவர் ஒரே ஆண்பிள்ளை. இவருடைய தாத்தா
முத்தையா செட்டியார் பெருஞ்செல்வராக இருந்தார். அவருக்குக்
கல்கத்தாவில் கப்பல் இருந்தது. பம்பாயில் சர்க்கரை ஆலை கொல்லத்தில்
சீமை ஓடு மில் இருந்தன. அவர் காலத்தில் கோட்டையூரில் அவரிடம்தான்
ரொக்கமாகப் பணம் நிறைந்திருந்தது. பலரும் அவரிடமே பணம்
பெற்று வந்தனர். குறைந்த வட்டிக்கே பணம் கொடுப்பது வழக்கம்.
இவருடைய தந்தை ராமனாதன் செட்டியார் காலத்தில் பணம் குறைந்தது.
ராமனாதன் செட்டியார் இன்னொருவருக்கு ஜாமீன் கையெழுத்து
போட்டதால் அவருடைய பெரியவீடு ஏலத்தில் போனது. அதனால் ரோஜா
முத்தையா அவர்கள் வளர்ந்த பொழுது செல்வம் குறைந்தது.
செட்டியார் ஐயா அவர்களுக்கும் சிவகாமி அம்மையாருக்கும் 1962இல்
திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் ஐயா கோட்டையூரிலேயே
தங்கிவிட்டார். செட்டியார் அவர்கள் புதுக்கோட்டையில் 7ஆம்
வகுப்பு வரை படித்து முடித்தார். பின்னர் படிக்கவில்லை.
இளம் வயது முதலே ஐயாவுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வமும் இருந்தது.
பள்ளிப்படிப்பு நின்று போனாலும் படிப்பிலே வெறி இருந்தது.
தன்னுடைய 25ஆம் வயதில் இவர் சென்னைக்குப் போனார். அங்கு
ஒரு அறையில் தங்கிக்கொண்டு நிறுவனங்களுக்கு போர்டு எழுதி
சம்பாதித்தார். ஆனால் இவருடைய அறிவு நாட்டம் இவரைப் புத்தகங்களை
வாங்கச் செய்தது. மூர் மார்க்கெட் இவருக்கு மிகவும் பிடித்த
இடம். தான் சம்பாதித்த பணத்தில் சாலையில் விற்கப்படும் பழைய
புத்தகங்களை வாங்கிக் கொண்டே போவார். அன்றைய மவுண்ட் ரோடு
முழுதும் நடந்து மூர் மார்க்கெட் போவார். பல நாள்கள் கையிலிருக்கும்
பணம் முழுமைக்கும் புத்தகங்களை வாங்கிவிட்டு இரவில் உண்ணாமல்
தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்குவார். ஒரு முறை கோட்டையூர்
வந்துவிட்டு சில காலம் கழித்து சென்னைக்குப் போனபோது இவர்
சேர்த்த புத்தகங்கள் காணாமல் போயிருந்தன. மீண்டும் புத்தகங்கள்
வாங்கினார். திருமணத்துக்குப் பின் அவருடைய சேகரிப்பை கோட்டையூருக்குக்
கொண்டு வந்தார். இவருடைய தந்தையாருக்கே நூல்கள் சேர்ப்பதில்
ஆர்வம் இருந்ததாம். இவருடைய பெரிய வீட்டில் இருந்த அலமாரிகளில்
முத்தையா செட்டியார் அவர்கள் புத்தகங்களை வைத்திருந்தார்.
அந்த வீடு இடிக்கப்பட்டபின் நூல்கள் நூல்கள் வைப்பது சிரமமானது.
பழைய வீடு இருந்த இடத்திலேயே செட்டியார் புதிதாக வீடு கட்டி
புத்தகங்களை சேமித்தார். கோட்டையூரில் தங்கிய பின்னர் அடிக்கடி
சென்னை மூர்மார்க்கெட்டுக்குப் போய் மூட்டை மூட்டையாக புத்தகங்கள்
வாங்கி வந்தார். செட்டிநாட்டு வீடுகளில் இருந்த பழைய நூல்களை
மலிவான விலைக்கு வாங்கினார். மதுரையில் இருந்த பழைய புத்தகக்
கடைகளில் புத்தகங்களை வாங்கி கோணிப்பைகளில் மூட்டை கட்டி
அவற்றைச் சுமந்து பேருந்தில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு
வருவார். கொண்டு வரும் புத்தகங்களை செப்பம் செய்து காப்பாற்றினார்.
புத்தகங்களுக்கு அட்டை போடுவது ஓட்டுவது எல்லாம் அவரே செய்வார்.
புத்தகங்களைப் பூச்சிகள் அழிக்காமல் இருக்க கமாக்சின் என்னும்
தூள் மருந்து போடுவார். இதுவே அவருடைய நுரையீரலைப் பாதித்தது.
அதனால் மிகவும் துன்புற்றார்.
அவருடைய சேகரிப்பில் பெரும்பான்மையானவை பழைய தமிழ் அச்சு
நூல்கள். பழைய தமிழ் நூல்களைச் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தார்.
அவரிடம் ஒரு லட்சம் நூல்கள் இருந்ததாக அவர் கணக்கிட்டார்.அவர்
நூல்களைச் சேர்த்த பழைய புத்தக வியாபாரி இல்லை. அவர் அரிய
பழைய நூல்களை பிரிட்டிஷ் மியூசியம் போன்ற பெரிய வெளிநாட்டு
நூலகங்களுக்கு விற்று வந்தார். உலகில் உள்ள பல நூலகங்களில்
அவர் பெயர் முத்திரையிடப் பட்ட நூல்கள் உள்ளன். 4.8.1970
நாளிட்ட கடிதத்தில் பிரிட்டிஷ் மியூசியத்தில் பணியாற்றிய
டாக்டர் ஆர்பெர்ட்டைன் கௌர் (DR.ALBERTINE
GAUR) "உங்களுடைய நூல்கள் ஒரே இடத்தில்
நீங்கள் மிகவும் நேசிக்கும் உங்கள் நாட்டிலேயே இருப்பதுதான்
தமிழ் ஆய்வாளர்களுக்கு பயனுடையதாக இருக்கும். உலகில் பல
இடங்களில் அவை சிதறுண்டு போகக் கூடாது" என் செட்டியாருக்கு
எழுதினார். அன்று முதல் புத்தகங்கள் விற்பதை நிறுத்திவிட்டார்.
தன்னுடைய நூல்களை அனைத்தையும் தேசத்தின் சொத்துபோல் கருதினார்.
தன்னுடைய நூலகத்துக்கு 'LIBRARY
SERVICE OF INDIA' என்று பெயரிட்டார். அவருடைய
புத்தகங்களில் இந்தப் பெயரை முத்திரை பதித்தார். செட்டியார்தான்
லைப்ரரியை சர்விஸ் என்றார். அது வெறும் வார்த்தை இல்லை,
அவரது உள்ளக் கிடக்கை. தன்னுடைய சேகரிப்பு நாட்டுக்காக என்று
கருதினார். நூல்களைப் பாதுகாப்பது, தேச சேவை என்று சொன்னார்.
ஒரு நாள் நானும் சேக்கிழாரடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்
அவர்களும் செட்டியார் வீட்டில் புத்தகங்களைப் பாதுகாப்பது
கடினமாக இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது
செட்டியார் குறுக்கிட்டு "காப்பாத்தோணும் சார் காப்பாத்தோணும்.
நீங்க படிக்கிறீங்க சுவைக்கிறீங்க என்பதால் நான் சொல்லலை.
புத்தகங்களைப் பாதுகாப்பது தேச சேவை" என்றார். நாட்டின்
பூர்வீக சொத்துக்களை, வளங்களைக் காப்பாற்றி வருங்காலச்
சந்ததியினருக்கு விட்டுச் செல்வதுபோல் நூல்களையும் காப்பாற்றித்
தரவேண்டும் என்பது பொருள். மகாத்மா கூறிய தர்மகர்த்தா முறையைக்
கடைபிடித்தார். ஒரு நாள் டி.என்.ஆர் அவர்கள் செட்டியாரிடம்
ஒரு புத்தகத்தைக் காட்டித் தான் எடுத்துக் கொள்ளலாமா எனக்
கேட்டார். அதற்குச் செட்டியார் " என்னுடையதெல்லாம்
உங்களுடையது. ஆனால் இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல லைப்ரரிக்க
சொந்தம்" என்றார்.
அவர் சேர்த்த
நூல்களில் சுமார் 10000 நூல்கள் முதற்பதிப்புகள், வேறு எங்கும்ம
கிடைக்காதவை. முதற்பதிப்பின் அருமை பலருக்குத் தெரிவதில்லை.
அதன் முக்கியத்துவத்தை உணர ஒரு நிகழ்ச்சியைக் கூற வேண்டும்.
1984 இல் தருமபுரம் ஆதீனம் 'சதமணிக் கோவை' என்னும் நூலைக்
குறிப்புரையுடன் வெளியிட்டது. அதைக் குறிப்புரை வரைந்து
பதிப்பித்தவர் அறிஞர் மு.அருணாசலம் அவர்கள். அவர் தன்னுடைய
ஆய்வு முன்னுரையில் சித்தாந்த சாத்திரங்கள் 14 என்பது பிழை
என்றும், அவை 16 என்றும் கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கு
வலு சேர்க்க சித்தாந்த சாத்திரங்கள் 14 என்பது 1866ஆம் ஆண்டில்
மதுரை நாயகம்பிள்ளை சித்தாந்த சாத்திரங்களை அச்சிட்ட காலம்
முதல்தான் வழக்குக்கு வந்தது என்றும் 'உந்தி களிறு' எனத்
தொடங்கும் வெண்பாவையும் அவரே இயற்றியிருக்க வேண்டும் என்றும்
எழுதினார். டி.என்.ஆர் அவர்கள் அவர் கருத்தை ஏற்று அணிந்துரை
வரைந்தார். ஒருநாள் டி.என்.ஆர். அவர்களும் நானும் வழக்கம்
போல் செட்டியாரைப் பார்க்கப் போயிருந்தோம். அவருடைய நூல்கள்
வேறொருவர் கிட்டங்கியிலும், மாடியிலும் இருந்தன. நாங்கள்
அவற்றைப் பார்க்கப் போனோம். அப்போது செட்டியார் அங்கு
இருந்த திருக்குறள் நூல்களை எடுத்துவரச் சொன்னார். நாங்கள்
வருவதை எதிர் நோக்கி வாசலிலேயே நின்றார். அவருடைய நூல்களை
எடுத்துவந்து அவரிடம் சேர்த்ததற்கு நன்றி சொன்னார். அந்நூல்களில்
ஒன்று 1861ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பதிப்பித்த
பரிமேலழகருரையுடன் கூடிய திருக்குறள் பதிப்பு அதில் இருந்த
சிறப்பு நாவலர் அவர்கள் கொடுத்திருந்த அடிக்குறிப்புகள்.
பரிமேலழகருடைய உரையில் பல நூல்களில் உள்ள அடிகள் குறிப்பிடப்படுகின்றன.
சுவடியில் அவ்வடிகள் கொண்ட நூலின் பெயரோ அந்நூலின் ஆசிரியர்
பெயரோ இராது. நாம் இன்று செய்வது போல் நிறுத்தக் குறியீடுகளோ,
மேற்கோள் குறியீடுகளோ இருக்காது. நாவலர் தன்னுடைய கல்விப்
பயிற்சியாலும் நினைவாற்றலாலும் மேற்கோள் பகுதிகளுக்குக்
குறியிட்டு அடிக்குறிப்புகளில் நூலின் பெயர் முதலியவற்றைத்
தந்துள்ளார். அடிக்குறிப்பில் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,
புறநானூறு போன்ற நூல்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. 1861
இல் இந்நூல்கள் அச்சில் வரவில்லை. உ.வே.சாமிநாதையருக்கு
அப்போது வயது 6 என்பதைக் கருத வேண்டும். நாவலர் பெருமானிடம்
இருந்த சுவடிகளைக் கொண்டே இக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
ஒரு குறளுக்கு எழுதப்பட்ட பரிமேலழகரின் உரையில் வரும் ஒரு
அடிக்குத் தரப்பட்ட குறிப்புரையில் "திருக்களிற்றுப்படியார்"
இது சைவச் சித்தாந்த சாத்திரங்கள் "பதினான்கனுள் ஒன்று"
எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நான் படித்ததும் டி.என்.ஆர்.
துள்ளிக் குதித்தார். இந்தக் குறிப்பு அறிஞர் மு.அருணாசலத்தின்
முடிவைத் தகர்த்துவிட்டது என்றார். மு.அருணாசலம் அவர்கள்
சித்தாந்த சாத்திரங்கள் 14 என்னும் வழக்கு 1866க்குப் பின்தான்
வந்தது என்றார். ஆனால் நாவலரின் கூற்று அதற்கு 5 ஆண்டுகளுக்கு
முன்பே வந்தது. மேலும் இவ்வழக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி
இலங்கையிலும் இருந்ததை இக்குறிப்புக் காட்டுகிறது. முதற்பதிப்பின்
தேவையை உணர்த்த இது ஒரு எடுத்துக்காட்டுத்தான். செட்டியாருடைய
நூல்களைக் கொண்டுட ஆய்வு மேற்கொண்டால் தமிழ் இலக்கிய வரலாறும்,
புத்தகப் பதிப்பு வரலாறும், அகராதித் தொகுப்பும் பெரிதும்
மாற்றமடையும். செட்டியாருடைய நூல்களைப் பார்ப்பாமலேயே பல
ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நூல்களைத் தொகுப்பதிலே அவர் கையாண்ட முறைகளைத் தனியே ஆய்வு
செய்ய வேண்டும். ஒரே நூல் பலமுறை பதிப்பிக்கப்பட்டிருந்தால்
அத்தனைப் பதிப்புகளையும் வரிசையாக வைத்திருப்பார். எடுத்துக்காட்டாக
ஆறுமுக நாவலருடைய பெரிய புராண வசன நூலின் 23 பதிப்புகளையும்
வைத்திருந்தார்.
செட்டியார் புத்தகங்கள் மட்டும் சேர்க்கவில்லை. கல்கி, ஆனந்தவிகடன்
போன்ற வார மாத இதழ்களைச் சேர்த்திருந்தார். பல பழைய பத்திரிக்கைகள்
அவரிடம் இருந்தன. அனைத்து தீபாவளி மலர்களையும் சேர்த்தார்.
பத்திரிகைகளைச் சேகரித்து வைக்க வேண்டும் என்னும் கருத்து
அவருக்குத் தானாக உருவானது. அவரிடம் செய்தித்தாள் கட்டிங்ககள்
பல்லாயிரக் கணக்கில் இருந்தன. ஒவ்வொரு கட்டிங்கைக் காப்பாற்ற
செட்டியாரே ஒரு முறையைக் கடைப்பிடித்தார். ஒவ்வொரு கட்டிங்கையும்
ஒரு அட்டையில் வைத்து செலபோன் தாளால் அதை மூடுவார். தேவைப்பட்டால்
வெளியில் எடுத்துக்காட்டுவார். ஒட்ட மாட்டார். இப்படி செலவு
செய்து தாள்களைக் காப்பாற்றினார். ஒவ்வொரு துண்டிலும் அது
எதிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டது என்ற குறிப்பு தேதியுடன்
இருக்கும். ஒவ்வொன்றிலும் முக்கியமான, அரசியல், சமூக, பொருளாதார,
கலை, அறிவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி இருக்கும். அவரிடம்
வரும் பழைய புத்தகங்களில் போடப் பட்டிருக்கும் செய்தித்தாள்
அட்டைகளை அகற்றி அவற்றில் முக்கிய செய்திகள் இருந்தால் காப்பாற்றுவார்.
அப்படி அவர் பாதுகாத்த மேலட்டையில் 13.4.1948 நாளிட்ட 'தந்தி'
இதழின் தலையங்கம் இருந்தது. அதன் தலைப்பு அரசியல்வாதிகளே
அத்துமீறாதீர்கள்! அன்றைய பிரதமர் ரெட்டியாருடைய அறிக்கையைச்
சுட்டி மன்றக் காங்கிரசு உறுப்பினர்கள் நிர்வாக அதிகாரிகளை
மிரட்டக் கூடாது என்று அத்தலையங்கம் கூறியது. இதன் முக்கியத்துவம்
கருதி செட்டியார் இதைக் காப்பாற்றினார். சீரழிவு 1948இல்
தொடங்கியதை இது காட்டுகிறதன்றோ? தினந்தந்தி வெளியிட்ட
மலரில் இத்தலையங்கத்தைச் சிறப்பாக வெளியிட்டுள்ளனர். தினந்தந்தி
வெளியீட்டாளர்களுக்குத் தெரியாமலேயே செட்டியார் இதன் முக்கியத்துவத்தை
உணர்ந்திருந்தார்.
இவரிடம் பல்லாயிரக் கணக்கான நாடக நோட்டீசுகளும், திரைப்பட
விளம்பரத் தாள்களும், துண்டுப் பிரசுரங்களும் இருந்தன. தமிழ்
நாடக, சினிமா, கலை வரலாறு எழுதமட்டுமல்ல தமிழ்ச் சமூகவியல்
ஆய்வுக்கும் இவை பெரிதும் தேவைப் படுபவை. நாடக நோட்டீசின்
முக்கிய தத்துவத்தை ஒரு நிகழ்வு மூலம் விளக்கலாம். 1988ஆம்
ஆண்டில் ஒரு நாள் பின்னாளில் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக
வந்த முனைவர் இராஜேந்திரனுடன் காந்தியைப் பற்றி உரையாடிக்
கொண்டிருந்தேன். அப்போது நான் காந்தி ஒரு புரட்சியாளர்,
என்று சொன்னேன். அவர் இதைச் சற்று நையாண்டியுடன் மறுத்தார்.
மேலும் காந்தி அப்படி என்ன புரட்சி செய்தார் என்று கேட்டார்.
நான், எவ்வளவோ சொல்ல வேண்டும்; ஒன்றைச் சொல்கிறேன். ஹரிஜன
மக்களைக் கோவிலுக்குள் நுழையச் செய்தாரே அது புரட்சி இல்லையா"
என்றேன். அதற்கு அவர் அது என்ன பெரிய புரட்சி என்றார். கோவில்
நுழைவு என்பது மிகச் சாதாரணம் என்று அவர் நினைத்துவிட்டார்.
இந்த உரையாடலுக்குப்பின் சில காலம் கழித்து அவரை அழைத்துக்
கொண்டு செட்டியார் வீட்டுக்குப் போனேன். அங்கு நூல்களையும்
மற்றவற்றையும் மலைப்புடன் பார்த்தார். அவரிடம் செட்டியார்
பாதுகாத்த நாடக நோட்டீசுகளில் ஒன்றைக் காட்டினேன். அது
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடிக்கப்பட்ட நாடகம்.
அந்த நோட்டீசின் அடியில் இருந்த குறிப்பைப் படிக்கச் செய்தேன்.
அதில் நாடகக் கொட்டகைக்குள் பெருவியாதஸ்தர்களுக்கும் பஞ்வமரர்களுக்கும்
அனுமதி இல்லை என்று இருந்தது. அப்போது அவரிடம் நான் சொன்னேன்
"தாழ்த்தப்பட்டவர்களுக்கு நாடகக் கொட்டகைக்குள்ளேயே
அனுமதி தராத நாட்டில் மகாத்மா அவர்களை கோவிலுக்குள் போகச்
செய்தது புரட்சியில்லையா?" அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
இது போன்ற எத்தனையோ சமூகவியல் உண்மைகளை அவருடைய சேகரிப்பு
வெளிப்படுத்தும்.
செட்டியாருடைய
சேகரிப்பு தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பொருளாதார, கலைப்பண்பாட்டு,
மொழி வரலாற்றைக் காட்டக் கூடியது. அதில் ஒரு முக்கியமான
கூறை இங்கு சுட்ட விரும்புகிறேன். அதுதான் மகாத்மாவின் தாக்கம்.
நல்லதம்பி திரைப்படத்தில் கலைவாணர் ஒரு நாடகக் காட்சியில்
தோன்றுவார். அது இந்திரன் சபையிலே கலைவாணர் தமிழ்நாட்டின்
பெருமையைக் கூறுவது. இந்திரன் கேட்பான் "நீர் எந்த
ஊர்" கலைவாணர் சொல்வார் "தர்மம் தழைத்தோங்கும்
தமிழ்நாடு" இந்திரன் "இந்த நாட்டைவிட பெரிதா?"
கலைவாணர் "இல்லை பெருமை வாய்ந்தது". எந்த வகையில்
பெருமையுடையது என்று பாட்டில் பட்டியிலிடும்போது ஒரு அடி
வரும் "உத்தமர் காந்தியின் சொல்லை நன்றாய் உணர்ந்து
நடப்பதில் எமக்கீடில்லை" என்பது அது. நான் கலைவாணருடைய
பாட்டு அழகு என்று எண்ணியிருந்தேன். ஆனால் அது வெறும் பாட்டு
அடி அன்று, ஒரு வரலாற்று உண்மை என்பதை செட்டியாருடைய நூலகத்தைப்
பார்த்ததும் அறிந்து கொண்டேன். தமிழில் மகாத்மாவைப் பற்றியும்
அவருடைய தத்துவங்கள் பற்றியும் அவ்வளவு நூல்கள் சுதந்திரத்துக்கு
முன் வெளிவந்துள்ளன. நூல்களின் எண்ணிக்கையும் அவை கூறும்
செய்திகளும் தமிழ் மக்கள் மகாத்மாவை அறிந்து, புரிந்து,
உணர்ச்சியுடன் ஆர்வமாகப் பின்பற்றினர் என்னும் உண்மையை உணர்த்தின.
மகாத்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் உடனுக்குடன் தமிழ் மக்களிடம்
விளக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக 1932இல் எரவாடா சிறையில்
அண்ணல் மேற்கொண்ட உண்ணா நோன்பு பற்றி 1932இலேயே "மகா
உபவாசம்" என்னும் நூல் வெளியானது. செட்டியாருடைய சேகரிப்புதான்
இதைக் காட்டும். செட்டியாருடைய காந்தி பற்றிய நூல் சேகரிப்பை
வைத்து "தமிழ்மக்களும் மகாத்மாவும்" என்ற பெரிய
ஆய்வை மேற்கொள்ளலாம். அவருடைய காந்தி நூல்களை வைத்து இதுவரை
ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. அண்ணலைப் பற்றிக் கவிதை
நூல்கள் ஏராளமாக வெளிவந்துள்ளன என்பதையும் நாம் அறியலாம்.
அவற்றில் ஒன்று காந்தி புராணம் என்பது.
செட்டியார் அவர்களுடைய சேகரிப்பில் ஒரு பகுதி தமிழ் நாடக
நூல்கள். அவர் சேகரித்திருந்த நாடக நூல்கள். படிப்பதற்குரியன
மட்டுமல்ல அவை நாடெங்கும் நடிக்கப்பட்ட நாடகங்கள். தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையில் செட்டியாருடைய
சேகரிப்பில் இருந்தவற்றில் நூறில் ஒன்றுக்கூட இல்லை. ஒரு
முறை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் "பாலர் நாடக சபைகள்"
பற்றிய கருத்தரங்கம் நடந்தது. அதில் டி.என்.சிவதாணு, எம்.என்.கண்ணப்பா
போன்ற பழம் நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்குக்குச்
செட்டியார் தன்னுடைய சேகரிப்பில் ஒரு பகுதி நூல்களைத் தன்னுடைய
செலவில் அனுப்பி வைத்தார். அவற்றைப் பார்த்த பழம் நடிகர்கள்
ஆனந்தக் கூத்து ஆடினர். எங்கும் காணக்கிடைக்காத அந்நூல்களை
அவர்கள் பார்த்துப் பரவசமடைந்ததை நான் கண்டேன். தமிழில்
உள்ள செல்வத்தை பல்கலைக் கழகம் அறியட்டும் என்று செட்டியார்
அனுப்பி வைத்தார். அவரிடம் இருந்த நூல்களில் ஒன்று பழவேற்காடு
ரெங்கப்பிள்ளை எழுதிய அரிச்சந்திர விலாசம். இதை வைத்துத்தான்
யாழ்ப்பாணம் சர்.டி.முத்துக்குமாரசாமி முதலியார் லண்டனில்
இருந்துகொண்டு, 1863இல் 'ARICHANDRA
OR HARISH CHANDRA' என்னும் ஆங்கில நாடகத்தை
எழுதி வெளியிட்டார். அந்நாடகம் விக்டோரியா மகாராணி முன்
நடித்துக் காட்டப்பட்டது. இந்நூலின் அட்டை மட்டும் செட்டியாரிடம்
இருந்தது. அவரிடம் மிட்டால் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட மீள்
பதிப்பை நான் அவரிடம் காட்டியப் போது அவர் மிகவும் மகிழ்ந்தார்.
19ஆம் நூற்றாண்டில் வெளி வந்த நாடக நூல்கள் அவரிடம் நிறைய
இருந்தன. தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறையைச் சேர்ந்த முனைவர்
இரவீந்திரன் ஒரு முறை என்னுடன் செட்டியாரைப் பார்க்க வந்தார்.
அவரிடம் செட்டியார் பழைய நாடக நூல்கள் உள்ளனவா என்ற கேட்டார்.
இரவீந்திரன் இல்லை என்றார். செட்டியார் அவரிடம். "உங்களுக்கு
இதைப்பற்றிய வருத்தமே இல்லையா? நூல்கள் இல்லை என்றுகவலை
இல்லையா? நானாக இருந்தால் இல்லையென்று அழுவேன்" என்றார்.
அவருக்கு அவ்வளவு அக்கறை. தமிழ்க் கல்வி பற்றிய கவலை.
செட்டியார் அவர்கள் அவரிடம் இருந்த அவ்வளவு நூல்களையும்
தொட்டுத் தடவிப் பார்த்தவர். பலவற்றைப் படித்தவர். அவற்றை
எப்படிப் பயன் கொள்வது என்பதை ஆய்வாளர்களுக்குச் சொன்னவர்.
பழைய தமிழ் நூல்களில் ஆங்கில ஆண்டு இருக்காது. புத்தகம்
வெளியிடப்பட்ட ஆண்டு தமிழில் இருக்கும். அந்தத் தமிழ் ஆண்டுக்கு
இணையான ஆங்கில ஆண்டைக் கணக்கிட்டு பென்சிலால் எழுதுவார்.
Bibliographical
details என்பது மேல் நாட்டினர் கடைப்பிடித்த
முறை. தமிழ் நூல்களுக்கு அரசு நிறுவனம் வெளியிட்ட நூல் விவரண
அட்டவணை நூல்கள்கூட உண்டு. இது மேல்நாட்டு முறையைப் பின்பற்றியது.
ஆனால் செட்டியார் பழைய தமிழ் நூல்களுக்கு புதிய நூல் விவரண
அட்டவணை முறையைச் சொன்னார். அம்முறையை வேறு எவரும் சொன்னதில்லை,
கடைப்பிடிக்கவும் இல்லை.
அவர் புத்தகங்களைக் கையாளும் முறையே அலாதியானது. 100 ஆண்டுகளுக்கு
மேலான நூலைப் புரட்டும்போது மிகவும் மென்மையாகப் புரட்டுவார்.
அவர் எந்தத் தாளும் கிழியாமல் புரட்டுவார். ஒரு புத்தகத்தை
எடுக்கும்போது அப்போது பிறந்த குழந்தையை எடுப்பதுபோல்
எடுப்பார். எந்த நூலை அவரிடம் கொடுத்தாலும் கோடி ரூபாய்
பணம் கொடுத்ததுபோல் மகிழ்ந்து வாங்குவார். அவர் இறுதிக்காலம்
வரை புத்தகங்களை வாங்கிக் குவித்தார். புத்தகத்தைச் செட்டியார்
எப்படிக் கையாண்டார் என்பதை கோட்டையூரில் பணியாற்றிய அஞ்சல்
நிலைய அதிகாரி எங்களிடம் இவ்வாறு கூறினார். "எல்லோரும்
தாங்கள் உடுத்தியுள்ள வேட்டி அழுக்காகாமல் பார்த்துக் கொள்வார்கள்.
செட்டியார் புத்தகத்தில் அழுக்கு இருந்தால், தான் உடுத்தியிருக்கும்
பட்டு வேட்டியால் துடைப்பார்" என்று.
அவருடைய புத்தகங்கள் அனைத்தும் ஒரு ஒழுங்கில் அடுக்கி வைக்கப்பட்டன.
நான் அவரைச் சந்திக்கும்போதே அவர் உடல் நலிவுற்றிருந்தார்.
அவருக்கு அவருடைய மகள் வள்ளிக்கண்ணும், இரண்டு பணியாளர்களும்
நூலகப் பராமரிப்பில் உதவி வந்தனர். அவர் திண்ணையில் அமர்ந்திருப்பார்.
அவரைச் சுற்றி நூல்கள் இருக்கும். யாராவது வந்தால் புத்தகங்களை
நகர்த்திவிட்டுத்தான் அமர வேண்டும். வருகிறவர்கள் நூலகத்துக்குள்
போகமுடியாது. ஏனென்றால் அவருடைய நூல்கள் திருடு போன கசப்பான
அனுபவம் அவருக்கு உண்டு. வருகிறவர்கள் கேட்கும் நூலை இருந்த
இடத்திலிருந்தே பணியாளர்களிடம் இடத்தைச் சொல்லி எடுத்துவரச்
செய்வார். அவ்வளவு நினைவாற்றல் அவருக்கு அவருடைய நூல்கள்
அவருடைய மூளையில் ஒரு ஒழுங்கில் அடுக்கியிருக்கும். அவர்
மரணப்படுக்கையில் இருந்தபோதுகூட வரிசையில் குறைந்த ஒரு
நூலைப்பற்றி கேட்டார். புத்தகங்களைப் பராமரிப்பது எப்படி
என்பதை அவரிடம்தான் கற்க வேண்டும். புத்தகங்கள் காற்றோட்டமும்
வெளிச்சமும் உள்ள இடத்தில் இருக்க வேண்டும்; மனிதக்குரல்
கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்; இல்லையேல் புத்தகங்கள்
மடித்துப்போகும், பூச்சிகள் அரிக்கும் என்று கூறுவார்.
புத்தகங்களை வெயிலில் வைத்து எடுப்பார். அந்தத் தேதிகளை
புத்தகங்களில் பென்சிலால் குறித்து வைப்பார்.
செட்டியாரிடம் 1200 தலைப்புகளில் சஞ்சிகைகள் இருந்தன. 19ஆம்
நூற்றாண்டில் வெளிவந்த பத்திரிகைகள் இருந்தன. தமிழ்நாட்டு
பத்திரிக்கைகள் பற்றி ஆராய இவருடைய சேகரிப்பு மிக முக்கியமானது
ஆகும்.
வார, மாதப் பத்திரிகைகளில் வந்த கட்டுரைகள் பற்றிய ஒரு இன்டெக்ஸ்
(index)
உருவாக்க முயன்றார். மேல் நாடுகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட
காலத்திலேயே தமிழ்நாட்டில் இவர் செய்தார். இது பற்றி செட்டியார்
ஒரு அரிய கருத்தைச் சொன்னார். செய்திகள் எதிர்பாராத இடங்களில்
இருந்துகூடக் கிடைக்கும் என்பதே அது. 'செக்ஸ்' என்று ஒரு
இதழ் வந்தது. அதிலும் சைவசித்தாந்தம் பற்றிக் கட்டுரை வரலாம்.
அந்த இதழின் தன்மையை எண்ணி அதில் வராது என்று கருதக்கூடாது.
அதை அறிய ' index
' உதவும் என்றார். அப்படி வெளியான பல கட்டுரைகளைத் தொகுத்தும்
வைத்திருந்தார். பத்திரிகைகளில் வெளிவந்த சுமார் 2 இலட்சம்
சிறுகதைகள் அவரிடம் இருந்தன.
அவருடைய சேகரிப்பு, மிகுந்த பொருளுடையது. ஒவ்வொரு செய்தித்தாள்
நறுக்குக்கும் ஒரு முக்கியத்துவம் இருந்தது. எடுத்துக்காட்டாக
பிக்காசோவின் ஓவியம் 10 கோடிக்கு விற்பனையான செய்தி இருக்கும்.
கூட்டன் பர்க் பைபிள் எவ்வளவு விலைபோனது என்று இருக்கும்.
செய்தித்தாள் நறுக்குகள் மட்டுமல்ல அவருடைய மற்றைய சேகரிப்புக்கும்
பொருள் உண்டு. ஒரு நாள் என்னிடம் காரைக்குடி பகுதியில்
நடந்த நாடகம் பற்றிய விளம்பர நோட்டீசைக் காட்டி அடிக்குறிப்பைப்
படிக்கச் சொன்னார். அதில் நாடகக் கொட்டகைக்குள் பெண்களுக்கு
அனுமதி இல்லை என்று போட்டிருந்தது. அதற்குச் செட்டியார்
பின் வருமாறு விளக்கம் சொன்னார். நாடகக் கொட்டகை போட
செட்டியார்கள்தான் இடம் கொடுக்க வேண்டும். அன்றைய நாடகங்களில்
இருபொருள்படும்படியான உரையாடல்கள் வரும். அதைச் செட்டியார்கள்
ரசித்து மகிழ்வார்கள். ஆனால் அவர்கள் வீட்டுப் பெண்கள் கேட்பதை
அவர்கள் விரும்பவில்லை. ஆகவே நாடகம் நடத்துபவர்களிடம் இடம்
தரும் செட்டியார்கள் நிபந்தனை போடுவார்கள். அதாவது அவர்கள்
பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று. அதனால்தான் அனுமதி இல்லையென்று
விளம்பரம் செய்யப்பட்டது. இப்படி ஒவ்வொன்றுக்கும் செட்டியார்
பொருள் பொதிந்த விளக்கம் தருவார். நகரத்தார் சமூக வழக்கங்கள்
பற்றி அவர் ஒரு என்சைக்ளோபீடியா. அவரிடம் நிறைய கலைப்பொருள்கள்
இருந்தன. அவற்றில் ஒன்று ஒரு முருகன் மரப்பாச்சி. அது மிகவும்
ஒல்லியானது. அதைக் காட்டி செட்டியார் ஒரு வரலாற்றைச் சொன்னார்.
முற்காலத்தில் செட்டியார்கள் வெளிநாடுகளுக்குத் தட்டுக்
கப்பலில் போவார்கள். அப்படிப் போகும்போது திருநீற்றுப்
பைக்குள் இந்த மரப்பாச்சியை "செட்டிக் கப்பலுக்குச்
செந்தூரான் துணை" என்று வைத்துக் கொள்வார்கள் என்று.
இப்படி எவ்வளவோ செய்திகளை அவருடைய சேகரிப்புப் பொதிந்து
வைத்திருந்தது. அவற்றை விளக்க ஐயா இல்லை. அவற்றை அறிந்துகொள்ள
நமக்கும் ஆர்வம் இல்லை.
தமிழ்நாட்டு அரசாங்கமும், கல்வி நிலையங்களும், குறிப்பாகத்
தமிழ்ப் பல்கலைக்கழகமும் உண்மையாகவே தமிழாய்வில் அக்கறை
கொண்டிருந்தால் செட்டியாருடைய சேகரிப்பை உரிய விலை கொடுத்து
வாங்கி அதற்கு அவரை curator ஆக நியமித்துப் பயன் கொண்டிருக்க
வேண்டும். கலாயோகி ஆனந்த குமாரசாமியின் கலைச் சேகரிப்புகளை
வாங்கி அவற்றுக்கு அவரையே curator ஆக நியமித்தது அமெரிக்காவில்
உள்ள பாஸ்டன் அருங்காட்சியகம். கலைப் பொருள்களுக்கு ஆனந்தகுமாரசாமியே
விளக்கம் எழுதினார். அப்படிப் பயன்கொண்டிருக்க வேண்டும்.
செட்டியார் அவர்களைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் அவர் சேகரிப்பை
வைத்து அதற்குச் சிறப்புத் தலைவராக செட்டியாரை வைத்துவிடலாம்
என்று நாங்கள் பெரிய கனவு கண்டோம். எவ்வளவோ நல்ல கனவுகள்
போலவே இதுவும் நனவாகவில்லை.
செட்டியார் ஒரு ஆய்வு நெறியாளர். கல்வி நிலையங்களில் பணியாற்றும்
ஆய்வு நெறியாளர்களுக்கும் வழிகாட்டும் ஆய்வு நெறியாளர்.
ஆய்வுப் பட்டம், முனைவர் பட்டம் பெற முயல்பவர்கள் செட்டியாரிடம்
வருவார்கள். அவர்கள் ஓரிரு நூல்களின் பெயர்களைச் சொல்லிக்
கேட்பார்கள். அந்நூல்களைக் கொடுத்துவிட்டு செட்டியார் தலைப்பைக்
கேட்பார். ஆய்வுத் தலைப்பை அறிந்ததும் அது தொடர்பான பல
நூல்களை செட்டியார் குவிப்பார். அவை ஆய்வுத் தலைப்புக்கு
எவ்வாறு உதவும் என்று கூறுவார். வருகிறவர்களில் பலர் எல்லா
நூல்களையும் படிப்பதில்லை. ஒரு சில நூல்களை மட்டுமே பயன்படுத்திக்
கொண்டு போய்விடுவர். ஏனெனில் அவர்களுக்கு உண்மையான அறிவு
நாட்டம் இல்லை. பட்டம் பெறுவதுதான் குறி. இந்த நிலை கண்டு
செட்டியார் மிகவும் வருந்துவார். அவர் சிறந்த ஆய்வு நெறியாளர்
என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு இதோ. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
பணியாற்றும் முனைவர் இரா.பவுன்துரை என்பவர் கட்டிடக்கலைகளை
ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார். அவர் செட்டிநாட்டு
வீடுகள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர்
என்னுடன் செட்டியாரைப் பார்க்க வந்தார். செட்டியாரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
கட்டிடங்களின் படங்கள் அடங்கிய ஆங்கில சஞ்சிகைகளைக் காட்டினார்.
செட்டியார் செட்டிநாட்டு வீடுகள் என்ன பாணி (style)
என்று கேட்டார். பவுன்துரை 'கலோனியல்' (colonial)
என்றார். செட்டியார் கேட்டார். அதன் டெவெலப்மெண்ட் ஆரிஜன்
என்ன என்று. பவுன்துரை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும்
தரவுகள் சேர்த்தபின் மீண்டும் வருகிறேன் என்றார். நான் தனியாகச்
செட்டியாரை இதுபற்றிக் கேட்டபோது 'கலோனியல் என்பதன் டெவெலப்மெண்ட்
ஆரிஜன் நம்முடைய பழைய வீடு' என்றார். அவருடைய மூதாதையர்
வீட்டைச் சொன்னார்.
செட்டியார்
பவுன்துரையிடம் ஒரு ஊரில் உள்ள ஒரு வீட்டைக்குறிப்பிட்டு
அதைப் பார்த்தீர்களா என்று கேட்டார். பவுன் துரை அதில் ஒன்றும்
சிறப்பில்லை என்றார். உடனே செட்டியார் அந்த வீட்டில் உள்ள
சிறப்பம்சத்தை விளக்கினார். உடனே பவுன்துரை அதை நான் பார்க்கப்
போகிறேன் என்று சமாளித்தார். செட்டியார் பதில் சொல்லும்போது
ஒரு ஆய்வு நெறியைக் குறிப்பிட்டார். "நீங்கள்தான் அந்த
வீட்டில் விசேஷமாக ஒன்றும் இல்லை என்று கூறி அடைத்துவிட்டீர்களே.
நீங்கள் எப்படிப் போவீர்கள். தரவுகளைத் (data) திரட்டும்போது
ஒன்றையும் ஒதுக்கக்கூடாது. எல்லாத் தரவுகளையும் சேர்த்துவிட்டு
ஆய்வு செய்ய வேண்டும். இல்லையேல் நீங்கள் செய்யும் முடிவு
தவறானது என்பதை நீங்கள் ஒதுக்கிய ஒரு தரவு காட்டிவிடும்."
7ஆம் வகுப்பு படித்த செட்டியார் எவ்வளவு பெரிய Research
Guide என்பது தெரிகிறதல்லவா.
செட்டியார்
சிறந்த சிந்தனையாளர் நல்ல நோக்கு உடையவர். உலகின் நடப்புகளைக்
கூர்ந்து பார்த்துக் கருத்துக்களைக் கூறுவார். முது முனைவர்
டி.என்.ஆர் அவர்கள் இவரை நூறு பேராசிரியர்களுக்குச் சமமானவர்
என்று எழுதினார். இவர் அதிகம் பேசமாட்டார். பேசுவதெல்லாம்
பொருள் பொதிந்து இருக்கும். இவருடைய கூர்ந்த மதிக்கும்
நோக்கரிய நோக்குக்கும் இதோ ஒரு சான்று. முன்பே நான் குறிப்பிட்ட
சர் டி.முத்துக்குமாரசாமி முதலியார் எழுதிய 'அரிச்சந்திரா'
ஆங்கில நாடகத்தின் மீள் பதிப்பை செட்டியாரிடம் காட்டினேன்.
அந்நாடக நூலுக்கு முதலியார் ஒரு ஆய்வுமிகுந்த முன்னுரை எழுதியிருக்கிறார்.
அதில் அர்ச்சந்திரனின் கதை பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும்
இலங்கையிலும் நடிக்கப்பட்டு வருகிறது என்றும் அன்றாடம் மக்கள்
பார்க்கிறார்கள், அழுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். அந்தக்
கதை மக்களை ஈர்க்கிறது என்று எழுதும்போது இவ்வாறு எழுதியுள்ளார்.
"The
story may be a myth. But the response it evokes in the
people is a fact." இதைச் செட்டியாரிடம்
படித்துச் சொன்னதுதான் தாமதம். உடனே அவர் "ஆமா சார்,
ஒரு காந்தியைக் கொடுத்திருக்கிறதே, போதாதா" என்றார்.
அரிச்சந்திரன் நாடகம் நடந்ததற்கு பயன் மகாத்மா என்று எந்தப்
பேராசிரியர் கூறுவார். செட்டியார் ஆழ்ந்த காந்தி பக்தர்.
மகாத்மாவைபோல் அசைக்க முடியாக கடவுள் நம்பிக்கை உடையவர்.
என்னை ஒரு கூட்டம் தாக்கியது. அதில் நான் தப்பித்தேன். இதை
செட்டியார் எனக்கு எழுதிய கடிதத்தில் "நல்லவேளை அந்தக்
காலிகளிடம் இருந்து தப்பினீர்கள். இறைவனுக்கு நன்றி"
என்று குறிப்பிட்டார். அவருடைய இறை நம்பிக்கைக்கு இது சான்று.
அண்ணலைப் போல் செட்டியார் உண்மையில் நாட்டமுடையவர். உண்மையை
ரசிப்பார். ஒரு முறை அவர் சொன்னார். "சார் உண்மை நிற்கும்,
நடக்கும், உட்காரும், ஏன் படுக்கக்கூட செய்யும். ஆனால் ஒரு
போதும் நொண்டாது" என்று. வெற்றுரைகளையும் பொய்யுரைகளையும்
வெறுப்பார். ஒரு முறை சட்டப்பேரவையில் விஷப்பாம்புகள் பற்றி
விவாதம் நடந்த செய்தி பத்திரிகையில் வந்தது. அந்த விவாதம்
அபத்தமாக இருந்தது. அதைப்பற்றி ஒரு கடிதத்தில் "அந்தச்
செய்தியைப் பார்த்த கண்ணைப் பத்துத்தரம் கழுவ வேண்டும்.
படித்த வாயை பதினோரு தரம் கழுவவேண்டும்," என்று எழுதினார்.
அறியாமையின் மீது கோபம்.
இவ்வளவு பெரிய
மேதையை தமிழகம் மதிக்கவில்லை. அவருடைய சேகரிப்பின் அருமையை
அறியவும் இல்லை. மிகப்பெரிய மேதாவிகள் என மதிக்கப்பட்ட பேராசிரியர்கள்,
துணைவேந்தர்கள், தலைவர்கள் இவருடைய நூல் சேகரிப்பின் உண்மையான
மதிப்பை உணரவில்லை. நானும் டி.என்.ஆர். அவர்களும் ஆளுநர்
முதல் துணைவேந்தர்கள் வரை எல்லோருக்கும் இதன் சிறப்பை விளக்கிக்
கடிதங்கள், மனுக்கள் எழுதி ஓய்ந்தே போனாம். யாரும் அக்கறை
கொள்ளவில்லை. செட்டிநாட்டுக்காரர்கள் இவர் குப்பையைச் சேர்க்கிறார்
என்றனர். இந்தப் புறக்கணிப்பைப் பொறுக்காது நான் எல்லோரையும்
சாடுவேன். அப்போது ஐயா சொன்னார். "சார், அப்படித்
திட்டாதீர்கள். பேராசிரியர்களெல்லாம் அறிவிலே நூறாண்டு பின்
தங்கியுள்ளனர். அவர்களுக்காக இரக்கப்படுங்கள். கோபப்படாதீர்கள்"
என்று அவருடைய கருணை உள்ளத்துக்கு இது சான்று. அவரைப் புறக்கணித்த
மக்கள் மீது அவர் அன்பு கொண்டார். "இவர்கள் என்ன செய்கிறோம்
என்று தெரியாமல் செய்கிறார்கள்" என்று இரக்கப்பட்டார்.
நாட்டின் சொத்தாகத் தன் சேகரிப்பை நினைத்ததால்தான் தன்
இறுதி மூச்சுவரைக் காப்பாற்றினார். அவர்க கோபப்பட்டிருந்தால்
இந்தப் பெருஞ்செல்வம் அழிந்திருக்கும். திருச்செங்கோடு
அ.முத்துச்சாமிக் கோனார் என்ற பெரும்புலவர் இருந்தார்.
அவரிடம் அரிய பழந்தமிழ் நூல்சுவடிகள் இருந்தன. இதுவரை அச்சாகாத
சுவடிகளும் இருந்தன. அவரை அப்பகுதி செல்வந்தர்கள் சபையில்
அவமானப்படுத்திவிட்டனர். அதில் மனம் உடைந்த கோனார் தன்னிடமிருந்த
பழஞ்சுவடிகளை நெருப்பில் எரித்துக் குளிர் காய்ந்தார். இது
வரலாறு. ஆனால் செட்டியார் சீற்றம் கொள்ளவில்லை. கருணையால்
நமக்குச் செல்வத்தைவிட்டுச் சென்றார்.
பெரும் சாதனையாளரான
செட்டியார் அடக்கமே உருவானவர். அகந்தை இல்லாதவர். 4.11.1988
நாளிட்ட இந்து நாளிதழில் இவரைப்பற்றி ஒரு கட்டுரை வெளியானது.
அதன் தலைப்பு "A
Life-time of Ceaseless Quest". அது
வந்தபின் ஒரு இரவில் அவர் வீட்டில் நானும் டி.என்.ஆர். அவர்களும்
தங்கியிருந்தபோது இது பற்றி செட்டியாரிடம் புகழ்ந்த பேசினோம்.
நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம். தலைப்பு நன்றாக இருக்கிறது
என்று நாங்கள் சொன்னதும் செட்டியார் "நீங்க சொல்றீங்க.
நான் சிரிச்சேன்" என்றார். ஏன் நன்றாகத்தானே போட்டிருக்கிறார்கள்
என்றோம். மீண்டும் அவர் "அதுதான் சிரிச்சேன்"
என்று கூறித் தொடர்ந்தார். "ஏன் சார், இந்தத் தலைப்பு
எனக்குப் பொருந்துமா? நான் என்ன வாழ்நாள் முழுதும் இதற்குப்
பாடுபட்டேனா? வீட்டு வேலைகள், கோர்ட் என்றெல்லாம் அலைந்துகொண்டே
அல்லவா இதைச் செய்தேன். இதே வேலையாக இருந்ததிருந்தால் இதைப்
போல் ஆயிரம் மடங்கு சேர்த்திருக்க வேண்டும். இந்தத் தலைப்பு
உ.வே. சாமினாத ஐயருக்குப் பொருந்தும். எனக்கல்ல" என்றார்.
இதை அவர் ஒப்புக்குச் சொல்லவில்லை. அங்கு நாங்கள் மட்டுமே
இருந்தோம். இது அவருடைய தன்னடக்கத்தையும், கர்வமின்மையையும்
காட்டும் நிகழ்வு.
அவருடைய சிந்தனையின்
உயர்வை அவர் பத்திரிக்கை நிருபருக்குச் சொன்ன செய்தி மூலம்
அறியலாம். இந்து நிருபர் கணபதி, "இதைச் செய்ய வேண்டும்
என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது" என்று கேட்டார்.
செட்டியார் "இதைத்தான் செய்ய வேண்டும் என்று தோனுச்சு.
வேறு ஒன்னும் தோணல" என்றார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி
தந்தது எது என்றதும் "உ.வே.சாமிநாதையர் வாழ்ந்த காலத்தில்
வாழ்ந்தேன் என்பது மகிழ்ச்சி. நான் பெரும்பாலான நூல்கள்
வாங்கிய மூர் மார்க்கெட் எரிந்தது எனக்கு ஏற்பட்ட பெரிய
துக்கம்" என்றார். அவருக்குப் பணத்தின் மீது மோகம்
இருந்ததில்லை. அவருக்குத் தேவைக்குத்தான் பணம். தன்னுடைய
சேகரிப்பின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் நினைக்கவே
இல்லை. பணம் தான் முக்கியம் என்றால் உலகத்தின் பல்வேறு இடங்களுக்கு
புத்தகங்களை விற்றிருக்கலாம். ஆனால் தன்னுடைய சேகரிப்பு
தனக்குப் பின்னால் பயனுடைய வகையில் பாதுகாக்கப்பட வேண்டும்
என அவர் விரும்பினார். எங்கள் முயற்சி பலனிக்கவில்லையே என்று
நாங்கள் கவலைப்பட்டபோது எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்
"நீங்கள் கவலைப்பட வேண்டாம். மிகப் பெரிய செல்வத்துக்குச்
சொந்தக்காரனாக இருந்தேன் என்ற மகிழ்ச்சியுடன் சாவேன்"
என்று எழுதியிருந்தார். நூலகத்தை விற்க அவர் முயன்றாலும்
அவருடைய ஆழ்மனதில் அதைப்பிரிய அவருக்கு விருப்பமில்லை. அதனால்தான்
அவர் இருக்கும் வரையில் அவரை விட்டு நூலகம் போகவில்லை என்பது
எங்கள் எண்ணம். அவர் இறந்தபின் அவர் உடலை புத்தக அலமாரிகளுக்கு
இடையே கிடத்திவைத்தோம். அவர் 4.6.1992 அன்று காலமானார்.
அவருடைய மறைவுச் செய்தி 7.6.1992 நாள் தினமணி மதுரைப் பதிப்பில்
12ஆம் பக்கத்தில் "ரோஜா முத்தையா காலமானார்"
என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டது. ஒரு பெரிய ஞானி அன்று
மறைந்தார். அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவருடைய
மனைவி சிவகாமி அம்மையார் இருக்கிறார்.
செட்டியார்
உயிரோடு இருக்கும்வரை நூலகத்தைப் பெற யாரும் முன்வரவில்லை.
இந்த அரிய தமிழ் ஞானச் செல்வத்தை வாங்க தமிழக அரசாங்கம்
முன்வரவில்லை. விலை மதிக்க முடியாத இச்செல்வத்தை 5 கோடி
ரூபாய் பெறும் என்று கணக்கிட்டு அதைக் குறைத்து விற்க செட்டியார்
குடும்பத்தினர் சமைவாக உள்ளனர் என்று டி.என்.ஆர். இந்தியன்
எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதினார். அதை சி.ஷி.லட்சுமி
என்பவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் தெரிவித்தார். அதன்பின்
சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஆசியப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ்
நை என்பவர் வந்து பார்வையிட்டு செட்டியாருடைய சேகரிப்பை
விலை கொடுத்து வாங்கினார். இப்போது அந்தச் சேகரிப்பை வைத்து
Roja
Muthiah Research Library சென்னையில் உருவாகியுள்ளது.
நம்முடைய கலைச் செல்வங்களின் அருமையை மேல் நாட்டினர்தாம்
நமக்கு உணர்த்தினர். அதுபோலவே சிக்காகோ பல்கலைக்கழகம்
நமக்குக்குச் செட்டியாரின் நூலகத்தைக் காப்பாற்றியது.
இக்கட்டுரை
மூலம் ஆய்வாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். Roja
Muthiah and His Collections என்னும் தலைப்பில்
ஆய்வு செய்ய முன்வாருங்கள். டி.என்.ஆர். அவர்களும் நானும்
உதவக் காத்திருக்கிறோம்.
நன்றி
'சர்வோதயம் மலர்கிறது'- மாத இதழ்
(செப்டம்பர், அக்டோபர் - 2012)