பாரத
தேவிக்குப் பள்ளியெழுச்சி
குவளை கிருஷ்ணமாச்சாரியார்
('பொழுது
புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்' என்று தொடங்கும் பாரத
மாதாவின் திருப்பள்ளி எழுச்சியை நினைக்குந்தோறும் புல்லரிக்கின்றது.
பாரதியின் பாப்பாப் பாட்டு, ஒவ்வொரு குழந்தையும் படிக்க
வேண்டிய வீர வேதமாகும்.
பாரதி அறுபத்தாறு என்ற வேதாந்தப் பாடல்கள் உண்மையில், 'பாரதி
ஆறாயிர' மாக மிளிர்ந்திருக்கவேண்டியவை.
இத்தகைய தெய்விகப் பாடல்கள், கவிச்சக்கரவர்த்தியின் உள்ளத்திலே
உதித்த சந்தர்ப்பங்களையும், இவை தோன்றிய காரணங்களையும் பாரதியாருடன்
கூடவேயிருந்து தமது கள்ளங்கபடமற்ற தன்மையாலும், பக்தியினாலும்
பாரதியாரின் அன்பைப் பெற்று அநுபவித்த ஸ்ரீ குவளைக் கண்ணன்,
1938-ல் தாம் எழுதிய இக்கட்டுரையில் வெளியிடுகிறார். இக்கட்டுரை
'ஹிந்துஸ்தான்' வாரப் பதிப்பில் வெளிவந்தது.
பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் பிறந்த கவி ஒருவனால்தான் வீரம்
ததும்பும் 'பாஞ்சாலி சபத'த்தைப் பாடியிருக்க முடியும் என்று
அக்காலத்திலேயே பந்தயம் கட்டிப் பேசிய ஜமீன் வரலாறு வெகு
ரசமான சம்பவமாகும் - ரா.அ.பத்மநாபன்)
ஸ்ரீ பாரதியாரின்
இரண்டாவது குமாரி சகுந்தலாவுக்கு நாலு அல்லது ஐந்து வயதிருக்கும்.
ஒரு நான் காலை சுமார் ஏழு மணிக்குக் காப்பி சாப்பிட்டாயிற்று
வெற்றிலை போட்டுக் கொண்டு பத்திரிகைகளுக்கு வியாசங்கள் எழுத
ஆரம்பித்தார் பாரதியார்.
அந்ச் சமயம் அவர் பத்தினியார் செல்லம்மா, சகுதந்தலா பாப்பாவைக்
கூப்பிட்டுக் கோபித்தும், அடித்தும் "வாசலில் போகாதே"
என்று சொல்லியும் வீட்டில் சமையல் கூடத்தில் ஒரு மூலையில்
உட்கார வைத்து, "நான் கிணத்தருகில் குளித்து வரும்
வரையில் நீ எங்கேயும் அசையக் கூடாது" என்று சொன்னார்.
தாயாரால் கண்டிக்கப்பட்ட குழந்தை அழுவதைக் கேட்ட பாரதியார்,
உடனே எழுதுவதை விட்டு, ஸ்நானம் செய்யப்பபோன சொல்லம்மாவைக்
கூப்பிட்டு, 'குழந்தை ஒரு தப்பும் செய்யவில்லையே, அதை ஏன்
அடிக்கிறாய்?' என்றார்.
அதற்கு, "நீங்கள் வெளியே போய் விடுகிறீர்கள், நானும்
குளிக்கப் போய் விடுகிறேன். தன்னைக் கவனிப்பார் இல்லாத காரணத்தை
ஆதாயமாகக் கொண்டு அது வீதிக்குப் போகிறது. எங்கேயாவது ஒரு
வீட்டிற்குள் போய் புகுந்து கொண்டு, அசல் வீட்டுக் குழந்தைகளிடம்
அடியுண்டு, மலங்க மலங்க அழுதுகொண்டு கிடக்கிறது. நான் ஒரு
பக்கம் குழந்தையைத் தேட, அது மறு பக்கம் வர இவ்வாறு ரொம்ப
நாழி பொறுத்து எங்கிருந்தோ அழுதுகொண்டு அதுவாக, அந்தக் குழந்தை
அடித்தது என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வருகிறது. தினம்
ஒது இவ்விதம் செய்தால், இதுக்குப் புத்தி எப்படி வரும்;
இதைத் தேடும் காரியமே எனக்குப் பெரிய காரியமாய்விட்டால்,
எனக்கு ஸ்நானம், சமையல், இதர வீட்டு வேலைகள் இதெல்லாம் எப்படி
ஆகிறது?" என்றார் செல்லம்மா.
உடனே பாரதியார், "செல்லம்மபா! இனி நீ குழந்தையை அடிக்காதே!
குழந்தை பாடு, என் பாடு. அதைத் தொடாதே! நான் குழந்தையை எங்கும்
போகாமல் பார்த்துக்கொள்ளுகிறேன்." என்று சொல்லிவிட்டுக்
குழந்தையைப் பார்த்து, "சகுந்தலா பாப்பா! அழாதே, அம்மா
இனி உன்னை அடிக்கமாட்டாள். உனக்குப் பாட்டுப் பாடுகிறேன்."
என்று சொல்லிவிட்டுக் குழந்தைப் பாப்பாப்பாட்டு பாடினார்.
இந்தப் 'பாப்பாப் பாட்டு' பாரதியாரால் 1913ஆம் வருஷம் பாடப்பட்டது.
இதுவே 'பாப்பாப் பாட்டு' பாடியதற்குக் காரணமும் சமயமும்
ஆகும்.
***
இருபத்தைந்து
வருஷங்களுக்கு முன் நான் புதுவையில் பாரதியுடன் இருக்கும்போதே,
"மகான்கள் தீர்க்காயுசாயில்லாமல் போய்விடுகிறார்களே,
பாரதியாரே, அதற்குக் காரணம் என்ன?" என்றேன்.
அதற்கு அவர், "மகான்கள் பூலோகத்திற்குத் தேவதூதர்கள்.
ஜனோபகாரார்த்தமாக அவர்கள் உதிக்கிறார்கள். பூலோகத்தில் அவர்கள்
வந்த காரியம் ஆனதும் இவ்வுலகில் நிற்கமாட்டார்கள். மறைந்து
விடுவார்கள்" என்றார். அவர் வாக்கையும் அநுபவத்தையும்
கவனித்தால் சரியென்றே தோன்றுகிறது.
ஏனென்றால்ல, ஸ்ரீ விவேகானந்தர் 40ஆவது வயதில் காலமானார்.
அவருடைய சிஷ்யையும் வேத புத்தியுமான சகோதரி நிவேதிதா தேவி
தமது 40ஆவது வயதில் காலமானர். நிவேதிதாவுக்கச் சிஷ்யரான
பாரதியாரும் 30ஆவது வயதில் காலமானர். இவ்விதம் குரு பரம்பரையில்
காலமான விஷயம் அதிகமாக இருக்கிறது.
***
பாரதியார்
புதுவையில் எங்கேனும் நடந்து செல்ல அவருடன் நானும் போக விரும்பி
நடந்தால், அவருக்கச் சரியாக என்னால் நடக்க முடியாது. அவருக்கு
வீதிகளில் மெதுவாக நடக்கத் தெரியாது. எனக்கு அவசரமாக நடக்க
முடியாது
. எனவே, என் ஓட்டம் அவர் சடைக்குச் சரியாக இருக்கும்.
***
புதுவையில்
அவர் எழுதிய 'பாஞ்சாலி சபதம்' முதற் பாகம் ஒரு ஜமீன்தாரிடம்
படித்துக காட்டினேன். அவர் அதிசயமாகக் கேட்டுக்கொண்டிருக்கையில்
அவருடன் இருந்த அவருடைய காரியதரிசி என்னை, "இந்தப்
புத்தகம் யார் எழுதியது?" என்று கேட்டார். அதற்கு நான்
பாரதியார் பாடியது என்று சொன்னேன். அதற்கு அவர், "பாரதி
என்நத ஊர்?" என்றார்.
"அவர் எட்டயபுரம்" என்றேன். "இப்படிப்பட்ட
பாட்டு எழுதியவர் எட்டயபுரத்தவராக இருக்க முடியாது"
என்று அவர் சொன்னார்.
காரியதரிசி அப்படிச் சொன்னதற்கு நான், "இல்லை ஐயா,
அவர் பல தடவைகளில் தாம் எட்டயபுரத்தவர் என்று சொல்லியிருக்கிறார்,
ஐயா" என்றேன்.
"இராது. அவர் எட்டயபுரம் இல்லை. வேண்டுமானால் நீ நேராகப்
போய் இந்தத் தர்க்க சந்தர்ப்பத்தைச் சொல்லி இன்னொரு தரம்
கேள். என்ன சொல்லுகிறார், பார். இருந்தாலும் நான் சொல்லுகிறேன்
கேள்: பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு நாய்க் குட்டி பிறந்தால்
அதற்கு மற்ற ஊர் நாய்கள் பதில் சொல்ல முடியாது. பாஞ்சாலங்குறிச்சியில்
ஒரு வித்வான் பிறந்தால், அவருக்கு மற்ற ஊர் வித்வான்கள்
பதில் சொல்ல முடியாது. ஆகவே, இப்படிப்பட்ட பாட்டு எழுதியவர்
ஊர் பாஞ்சாலங்குறிச்சியாகத்தானிருக்கவேண்டும். பாஞ்சாலங்குறிச்சி
தவிர மற்ற ஊர்களில் பிறந்தவர்களால் இப்படிப்பட்ட வீரப் பாட்டு
எழுத முடியாது" என்றார்.
அந்தக் காரியதரிசி சொல்லில் கொஞ்சம் சந்தேகப் பட்டு நான்
பாரதியாரிடம் சென்று, "ஐயா, தாங்கள் எந்த ஊர்?"
என்று கேட்டேன்.
"என்ன கிருஷ்ணா, அடிக்கடி எந்த ஊர் என்று கேட்கிறாய்?
எட்டயபுரம், எட்டயபுரம் என்று எத்தனை தடவை சொல்லுகிறது?"
என்றார்.
அதன்பேரில் நான் மேற்படி ஜமீன்தான் வீட்டில் நடந்த சம்பவங்களைச்
சொன்னேன். பிறகு புன்சிரிப்பு சிரித்துக கொண்டே, "அந்த
ஓரந்தான்" என்றார் பாரதியார். எட்டயபுரம் ஓரந்தானாம்
பாஞ்சாலங்குறிச்சி.
***
ஒரு நாள்
பாரதியாரை, "ஐயா, இந்த ஊரில் ஒரு நல்ல மடு இருக்கிறது.
அஅது கோண்சம் தூரத்தில் இருக்கிறது. தாங்கள் தினம் அங்கு
ஸ்நானத்திற்கு வர முடியுமா?" என்று கேட்டேன். பாரதியார்,
"எங்கே! எங்ககே!" என்று புன்சிரிப்புடன் கேட்டார்.
"நமது வீட்டிற்கு மேற்கே சுர் இரண்டு மைல் தூரத்தில்
இருக்கிறது. அந்ப் மடுவிற்கு விடியற்காலை நாலு மணிக்குச்
சென்றால்தான் நிம்மதியாகக் கும்பலில்லாமல் ஸ்நானம் செய்யலாம்"என்றேன்.
"விடியற்காலை நீர் எப்பொழுது வந்து எழும்பினாலும் உன்னுடன்
வருகிநேன். தப்பாமல் விடியற்காலையில் வீட்டில் வந்து என்னை
எழுப்பு" என்றார் பாரதியார்.
அவர் சொன்னபடி மறு நான் காலையில் நாலு மணிக்கு அவர் வீட்டுக்
கதவைத் தட்டினேன்.
"யார்?" என்றார் பாரதியார். "நான்தான்"
என்றேன். உடனே சந்தோஷமாக எழுந்து வந்து கதவைத் திறந்து என்
கூடவே மடுவுக்குக் கிளம்பினார். போகும் மார்க்கத்தில், இவர்
வீட்டிற்கும் மடுவிற்கும் இடையில் ரஷ்தாவிற்கு இருபுறத்திலும்
நஞ்சை வயர்கள்; தென்னந்தோப்புகள். இவற்றின் செழுமையையும்,
பிரகிருதியின் அழகு ஆனந்தங்களையும், பிறப்பிலேயே வரகவியாதலால்,
எனக்குத் தெரியாமலேயே கவனித்து வந்தார் பாரதியார். 'குயில்
பாட்டு'க்கு அடிப்படையான கருத்துக்கள் இக் காட்சிகளினாலேயே
இவருக்கு வளமாக உதயமாயின.
அன்று அவரும் நானும் அந்த மடுவில் ஸ்நானம் செய்தோம். இவ்வாறு
இரண்டு நாட்கள் ஆயின. மூன்றாம் நாள் அவர் வீட்டிற்குப் போகாமையால்
அவர் என் வீட்டிறகு விடியற்காலையில் நடந்து வந்து கதவைத்
தட்டி எழுப்பினார். உடனே நான் விழித்து, குரலிலிருந்து பாரதியார்
என்று தெரிந்து, என் தாயாரிடம், "அம்மா, இவர்தானம்மா,
பாரதி" என்றேன்.
என் தாயர்ர் உடனே கதவைத் திறந்து உள்ளே அழைத்து உட்காரச்
சொன்னார். பிறகு, "பையா, பாரதி பாரதி என்கிறாயே, அவரைச்
சுப்ரபாதம் சொல்லச் சொல்லு, பார்ப்போம்" என்றாள்.
அதற்குப் பாரதியார் "சுப்ரபாதம் என்றால் என்ன?"
என்றார்.
உடனே என் தாயார், "சுப்ரபாதம் என்றால் என்ன என்கிறாரே!
இவ்வளவுதானா உன் பாரதி!" என்றாள்.
இதனிடையே நேரமாகவே நாங்களிருவரும் மடுவுக்குப் புறப்பட்டோம்.
பாரதியாருக்கு மனத்தில் நிம்மதியில்லை. வழியில், 'சுப்ரபாத'த்திற்கு
என்னை அர்த்தம் கேட்டார்.
"சம்ஸ்கிருதத்தில் சுப்ரபாதம், தமிழில் திருப்பாவை,
திருப்பள்ளியெழுச்சி" என்றேன். திருப்பள்ளியெழுச்சியில்
ஒரு பாட்டுச் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன். அதைக் கேட்டு,
அதே மாதிரியாகப் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி பாடி, என்
தாயாரிடம் அப்பாடல்களை நேராக முதன் முதல் பாடிக் காட்டினார்.
***
மற்றொரு
நாள் பாரதியாரை வேறொரு மடுவுக்கு அழைத்துச் சென்றேன். அந்த
மடுவுக்குத் தியாகராஜ பிள்ளை மடு என்று பெயர். சௌகரியமான
படிக்கட்டுகள். தெளிவான ஜலம், திருப்தியான ஆழம், ஜன சந்தடியில்லாத
சாலை, அருணோதய சமயம், ஜனக் கரை மேல் முதர்ந்த பெரிய மாமரங்கள்,
தென்னை மரங்கள். இப்பேர்ப்பட்ட காட்சிகள் என்னைப் போன்ற
பாமரனுக்கே மனோ ஆனந்தத்தை உண்டாக்கும்போது, நம் கவிச்சக்கரவர்த்தி
பாரதியாருக்குக் 'குயில் பாட்டு' எழுத மன வெழுச்சி உண்டாக்கியதில்
ஆச்சரியமில்லை.
***
அவர் பத்திரிகைகளில்
எழுதிய விஷயங்களில் ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது: "இந்த
அழுமுஞ்சி நாட்டிலே காளிதாஸன் உண்டாவானோ?" என்று எழுதினார்.
காளிதாஸனுக்குப் பிறகு வரகவி பரம்பரை நம் நாட்டில் இல்லையென்ற
குறையானது அவரை இவ்வாக்கியம் எழுதும்படி செய்தது.
***
பாரதியார்
வீட்டில் நான் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாராயணம் செய்வதுண்டு.
மௌனமாக ஆழ்ந்த கவனத்துடன் பத்திரிகைகளுக்கு வியாசங்கள் எழுதிக்
கொண்டிருக்கும் சமயங்களில் என்னை மௌனமாகப் பாராயணம் செய்துகொள்ளும்படியாகச்
சொல்லுவார்.
அதற்கு நான் "ஐயா, எழுதும் காரியம் தங்களுடையது, படிக்கும்
காரியம் என்னுடையது. அவாளவாள் காரியத்தை அவாளவாள் ஏககாலத்தில்
கவனத்துடன் செய்து வந்தால் யாருக்கு என்ன நஷ்டம்?"
என்று ஒரு சமயம் சொன்னேன்.
அதற்கு அவர், "நீ சத்தம் போட்டுப் படித்தால் நான் எழுதும்
காரியத்திற்குத் தடையாக இருக்கிறது" என்றார்.
அதற்கு நான் "ஐயா, நீங்கள் மற்ற மனிதர்கள் மாதிரி சாதாரண
மனிதராக என் புத்தியில் படவில்லை. ஆகையினால்தான் நீங்கள்
எழுதும்போது நானும் கூசாமல் பாராயணம் செய்து வருகிறேன்.
ஏக காலத்தில் ஒரு காரியத்திற்குமேல் காரியங்கள் செய்யவல்ல
சக்தி உங்களிடம் இருப்பதாக எண்ணி நான் படித்து வருகிறேன்"
என்றேன்.
உடனே அவர், "நான் உன் வழிக்கு வருவதில்லை. எப்போது
வேண்டுமானாலும் படிக்கலாம்" என்றார்.
***
ஒரு நாள்
பாரதியார் "கிருஷ்ணா, இந்த நாலாயிரம் எத்தனை ஆழ்வார்கள்
சேர்ந்து பாடியது?" என்று கேட்டார். அதற்கு நான், "பதினோரு
ஆழ்வார்களும் ஆண்டாளும் திருவரங்கத்தமுதனாரும் சேர்ந்து
பாடியது நாலாயிர திவ்வியப் பிரபந்தம்" என்றேன்.
"பன்னிரண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடினார்களா?
நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!" என்றார். உடனே
நான், "உங்கள் ஒருத்தரால் ஆறாயிரம் பாட முடியாது. ஏனெனில்,
கலி முற்ற முற்ற, மனிதனுக்கு ஆயுசு குறைவு. கலி முற்றிய
காலத்தில் சிறிய மனிதர்கள் நாம். ஆகையினால் முடியாது"
என்றேன். "நான் இவ்வாறு சொல்வதனால் உங்களுக்குப் புத்தி
குறைவென்று நான் எண்ணுவதாக நீக்ஙள நினைக்கக்கூடாது"
என்றும் சொன்னேன்.
"நல்லது பார்" என்று அவர், "பாரதியார் ஆறாயிரம்"
என்ற நூல் எழுத ஆரம்பித்தார். இதனிடையில் குடும்ப கவலை,
சச்சரவு, வறுமை, வியாதி, முடிவில் மரணம். இவற்றினிடையே அறுபத்தாறு
பாடல்களே பூர்த்தியாயின. அவர் பாட விரும்பிய ஆறாயிரம் பாடல்களில்
சாரமும், அர்த்தமும், அறுபத்தாறு பாடல்களில் பொதிந்து கிடப்பதாக
அடியேன் அபிப்பிராயம். அவர் காலத்திற்குப் பின் இதை அச்சிட்டவர்கள்
இந்த நூலுக்குப் 'பாரதி அறுபத்தாறு' என்று, பாடல்களைக் கணக்கிட்டுப்
பெயரிட்டு அச்சிட்டார்கள் போலும்!
***
"நாம்
இன்னும் நானூறு வருடங்களுக்குப் பின்னாலே தோன்ற வேண்டியவர்கள்.
முன்னாலேயே தோன்றிவிட்டோம். என்ன செய்வது!" ஒரு சமயம்
நான் அவரை ஒரு கேள்வி கேட்டதற்குப் பாரதியார் இவ்வாறு கூறினார்:
"ஐயா, பாரதியாரே! உங்கள் கொள்கைகள் கருத்துக்கள் எல்லாம்
எனக்குத் திருப்திகரமாக இருக்கின்றன. நீங்கள் சொல்வதை நான்
ஒப்புக்கொள்வதும், நான் சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்வதும்
நமக்குள் இயல்பாக இருக்கிறது. நிற்க; ஜனங்களில் பலர் நாம்
தப்பிதமான கொள்கைகளை வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே, அதற்கென்ன
சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டேன்.
"நாம் இப்போது சொல்லுபவைகளையெல்லாம் நானூறு வருடங்கள்
கழித்து உலகம் ஒப்புக்கொள்ளும்" என்றார். அவர் இவ்வாறு
சொல்லி (1938-இல்) 25 வருஷ காலந்தான் ஆகிறது.