மகாகவி பாரதியாரின் கடிதங்கள்

கடையத்திலிருந்து நெல்லையப்பருக்குக் கடிதம், 1918

ஓம் சக்தி

கடையம்
21 டிசம்பர் 1918

ஸ்ரீமான் நெல்லையப்ப பிள்ளைக்கு நமஸ்காரம்.

நான் ஸெளக்கியமாகக் கடையத்துக்கு வந்து சேர்ந்தேன். இவ்வூருக்கு நான் வந்த மறுநாள் பாப்பா பாட்டு, முரசு, நாட்டுப் பாட்டு, கண்ணன் இவை வேண்டுமென்று பலரிடமிருந்து கடிதங்கள் கிடைத்தன.

என் வசம் மேற்படி புஸ்தகங்கள் இல்லை. உன்னிடம் மேற்படி புஸ்தகங்களிருந்தால் அனுப்பக்கூடிய தொகை முழுதும் அனுப்பும்படி ப்ரார்த்திக்கிறேன்.

'பாஞ்சாலி சபதம்' - இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒன்றாக அச்சடிப்பதற்குரிய ஏற்பாடு எதுவரை நடந்திருக்கிறதென்ற விஷயம் தெரியவில்லை. இனிமேல் சிறிது காலம் வரை நான் ப்ரசுரம் செய்யும் புஸ்தகங்களை போலீஸ் டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் காட்டி அவருடைய அனுமதி பெற்றுக்கொண்ட பிறகே ப்ரசுரம் செய்வதாக ராஜாங்கத்தாருக்கு நான் ஒப்பந்தமெழுதிக் கொடுத்திருக்கிறேன்.

ஏற்கெனவே 'பாஞ்சாலி சபதம்' (முதல் பாகம்) வெளிப்பட்டிருக்கிற படியாலும், ப்ரசுரம் செய்பவன் நானன்றி நீயாதலாலும் இதை அச்சிடுமுன் மேற்படி ஒப்பந்த விதியை அனுசரித்தல் அவசியமில்லையென்று தோன்றுகிறது.

அப்படியே காண்பித்தாலும் தவறில்லை. நமது நூல் மாசற்றது. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் மிஸ்டர் ஹானிங்டன் எனக்கு மிகவும் அன்புள்ள ஸ்நேகிதர்; தங்கமான மனுஷ்யன். ஆதலால், அநாவசியமான ஆஷேபங் கற்பித்து நமது கார்யத்தைத் தடை செய்யக்கூடியவரல்லர். நீயே மேற்படி நூலை அவரிடத்தில் காட்டி அனுமதி பெற்றுக்கொள்ளுக.

பாப்பா பாட்டு முதலியன உன்னிடம் இல்லாவிட்டால் உடனே அவற்றை மீண்டும் ப்ரசுரம் செய்தல் மிகவும் அவஸரம்.

இவை முதலிய எல்லா விஷயங்களைப் பற்றி உன்னிடம் நேரே பேச விரும்புகிறேன். இதன் பொருட்டாக இக்கடிதம் கண்டவுடன் இங்கு நீ நேரே புறப்பட்டு வந்துசேரும்படி வேண்டுகிறேன். ஸ்ரீமான் குவளை க்ருஷ்ணையங்கார் முதலிய நம்முடைய நண்பர்களுக்கு என் நமஸ்காரத்தைத் தெரிவிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். இன்னும் ப்ரசுரம் செய்ய வேண்டிய நூல்கள் என்னிடம் பல இருக்கின்றன. நான் இப்போது பிரிடிஷ் இந்தியாவுக்கு வந்துவிட்டபடியால் நமது ப்ரசுரங்களுக்குப் பணம் கொடுக்கக் கூடிய நண்பர்களும் பலர் இருக்கிறார்கள். உன்னை ஸஹாய புருஷனாகக் கொண்டால் ப்ரசுர கார்யம் தீவிரமாகவும் செம்மையாகவும் நடைபெறுமென்று தோன்றுகிறது.

எதற்கும், நீ உடனே புறப்பட்டு இங்கு வந்துசேரும்படி ப்ரார்த்திக்கிறேன்.

உனக்கு மஹாசக்தி அமரத் தன்மை தருக.

உனதன்புள்ள,
சி.சுப்பிரமணிய பாரதி


Website Designed by Bharathi Sangam, Thanjavur