பிரான்ஸ்
தேசத்திற்கும், இங்கிலந்திற்கும் அநேக நூற்றாண்டுகளாக
விரோமுண்டு. பிரான்ஸில் இங்கிலந்தைத் 'துரோகி இங்கிலந்து'
என்று சொல்வது வழக்கம். இவ்வாறிருக்கச் சமீபத்தில்
சில காரணங்களை உத்தேசித்து இவ்விரண்டு தேசங்களுக்கிடையே
நட்புடன்படிக்கை நடந்திருக்கின்றது. இதை வைத்துக்கொண்டு
பிரிடிஷ் பார்லிமென்டில் மிஸ்டர் ரீஸ் என்பவன், "பிரான்ஸ்
தேசத்தில் பிரிடிஷ் ராஜாங்கத்துக்கு விரோதமாகச் சில
ராஜத் துரோகப் பத்ரிகைகள் பிரசுரமாகின்றன. பிரான்ஸ்
நம்முடன் சினேகமா யிருப்பதால் அதைத் தடுப்பதற்குரிய
முயற்சிகள் செய்யும்படி கேட்டுக் கொள்ளவேண்டும்"
என்று பேசி யிருக்கிறான்.
ராஜத் துரோக மென்றால் என்ன அர்த்தம்? சாமானியமாக பிரிடிஷ்
சட்டத்துக்குட்பட்டுச் சில சுதந்திரங்களுக்கப் பாடுபட
வேண்டு மென்று எழுதினாற்கூட, அது ராஜத் துரோக மென்பதாகப்
பிரிடிஷ் கவர்ன்மென்டார் புத்தியிலே படுகிறது. இதைப்
பிரான்ஸ் தேசத்தார் எப்படித் தடுக்க இச்சிப்பார்கள்?
பிரான்ஸ் தேசமே ஸ்வதந்திர தேவியின் ஜன்ம பூமி. அங்கே
போய் ஆங்கிலேயர் ஸ்வதந்திர தேவியைக் கொவ்தற்கு மருந்து
கேட்கப் போவது அவர்களுடைய மண்புத்தியைக் காண்பிக்கிறது.