"பயம்" என்னும் பெயர்கொண்ட கிழவி 'நிதானம்'
என்ற பெயர்கொண்ட தொட்டிலிலே குழந்தைகள் போட்டு
ஆட்டுகிறார். இந்தக் குழந்தைகள் யாவரெனில், சென்னை
நிதானக் கட்சித் தலைவர்களாகிய வி.கிருஷ்ணசாமி
அய்யர், கோவிந்த ராகவய்யர் முதலியவர்களே.
இதன் குறிப்பென்ன வென்றால், இந்த நிதானக் கட்சித்
தலைவர்கள் பயம், சந்தேகம் முதலிய குணங்களின் வசப்பட்டு
தேசபக்திக் கட்சியினின்றும் விலகி நிற்கிறார்கள்.
இதற்கு இப்போது ஒரு சரியான திருஷ்டாந்தம் கிடைத்திருக்கிறது.
விபின சந்திரபாபு இப்போது சென்னைக்கும் வந்திருப்பதில்
இவர்க ளெல்லாம் அவருக்கு மரியாதை செய்யும் கூட்டத்திலே
சேராமல் பிரிந்துதிருக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு
விலகி இருப்பதால் எவ்விதமான நஷ்டமும் நேர்ந்து
விடவில்லை.
லக்ஷக்கணக்கான ஜனங்கள் சென்னையிலே விபின பாபுவைத்
தெய்வம் போலக் கொண்டாடுகிறார்கள்.
குடித்தனக்காரர்களிடம் பணம் இறுக்கி வாங்குவதிலே
நாட்களையும் சிந்தனையையும் செலவிட்டு வருவோர்களாகிய
சில வக்கீல்கள் பிரிந்து நிற்பதினாலே குடிகெட்டுப்
போய்விடுமா?
அபிப்பிராயங்களிலே வித்தியாசமேற்பட்ட போதிலும்
தேசபக்தி என்ற பொதுக் கருத்துக் கொண்டேனும் இந்த
வக்கீல் கூட்டத்தார் அவருக்கு மரியாதை புரிய முற்படாதிருந்தமை
மிகவும் வினோதமாக விருக்கின்றது. இவர்க ளெல்லாம்
ஜனத்தலைவர்க ளென்றும், தேசபக்தர்க ளென்றும் நடித்துக்
கொள்கிறார்களே, இதன்றோ வியப்பு!
இந்தியா
- 04.05.1907