வாழிய
செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக, தீதெலாம்
நலிக.
அறம் வளர்ந்திடுக,
மறமடிவுறுக
ஆரிய நாட்டினர் ஆண்மையொ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக
நந்தேயத்தினர் நாடோறும் உயர்க.
வந்தே
மாதரம் வந்தே மாதரம்.
சென்ற
வாரம் சனிக்கிழமை யன்று தமிழரகளின் புது வருஷப் பிறப்பு
நாள். ஆதலால் அன்ற நாம் விடுமுறை பெற்றுக் கொண்டோம்.
புது வருஷம் நமக்கு ஸர்வ மங்களமாகவே பிறந்திருக்கின்றது.
இது முதலேனம் நாம் இடையாறாது விடாமுயற்சியுடன் ஸ்வராஜ்யம்
கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் முயற்சி புரிய வேண்டுமென்பதாக
நம்மவர்களிலே பலர் புதுவருஷப் பிறப்பன்று பிரதிக்கினை
செய்து கொண்டார்கள்.
ஸ்வராஜ்யம் பெறும் வழிகளாகிய ஸ்வதேசியக் கல்வி, அன்னிய
வஸ்து பஹிஷ்காரம், ஸர்க்கார் உத்தியோக வெறுப்பு, பஞ்சாயத்து
தீர்ப்புகள் முதலிய ஏற்பாடுகள் நமது நாட்டிலே பரவுவதற்குரிய
பிரயத்தனங்கள் எவ்விதத்திலேனும் செய்ய வேண்டுமென நம்மவர்கள்
நிச்சயம் செயது கொண்டிருக்கிறார்கள்.
மேலும் நமக்கு அனேக நற்சகுனங்களும் தோன்றியிருக்கின்றன.
தூத்துக்குடிக்குச் சுதேசீயக் கப்பல்கள் வந்துவிட்டன.
'பஞ்சாபி' பத்திரிகைக்காரரின் தண்டனை உறுதியாய் விட்டது.
அதாவது தேசாபிமானம் என்று வாயால் பேசிக் கொண்டிருந்த
நாட்கள் போய், கஷ்டத்தைப் பாராட்டாமல் தேசத்திற்குழைக்கும்
நாட்கள் வந்து விட்டன.
தூக்கத்திலே விருப்பம் கொண்ட சென்னை மாகாணத்தின் முகத்திலே
தேசாபிமான ஜலத்தை வாரிக்கொட்டி எழுப்பி விடும் பொருட்டாகப்
பாபு விபன சந்திரபாலர் வந்துவிட்டார். இன்னும் பல
நற்குறிகளும் காணப்படுகின்றன. இவை யனைத்தையும் பாழாக்கி
விடாமல் காலத்தின் சின்னங்களை நமக்கனுகூலமான வழியிலே
பயன்படுத்திக் கொள்வது நம்மவர்களின் கடமையாகும்.