மகாகவி பாரதியாரின் கட்டுரைகள்

Go Ahead, Russia!
ருஷியாவின் தீவிர அபிவிருத்தி
(சி.சுப்பிரமணிய பாரதி)

சென்ற வாரம் ருஷியாவைப் பற்றி எழுதியிருந்த குறிப்பிலே அத் தேசமானது ஓர் பெரிய ராஜாங்கப் புரட்சி ஏற்படும் நிலைமையி லிருக்கிறதென்று தெரிவித்திருந்தோம். அதற்கு அப்பால் வந்து கொண்டிருக்கும் தந்திகள் மேலும் நமது அச்சத்தை உறுத்திப்படுத்துகின்றன. ...... அநேக விடங்களில் கலகம் தொடங்கிவிட்டன வென்றால் ராஜாங்கம் எத்தனை தூரம் அமைதி கெட்ட நிலைமையிலிருக்க வேண்டுமென்பதை எளிதாய் ஊகித்து அறிந்து கொள்ளலாம்.

ருஷிய "டூமா" மெம்பர்கள் அதிதீவிரமாகச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். எவ்விதமான குற்றத்திற்கும் மரண தண்டனை கிடையா தென்பதாக ஜூலை மாதம் 2ம் தேதி டூமா மெம்பர்கள் சட்டம் ஏற்படுத்தி விட்டார்கள்.

இங்கிலாந்து பிரான்சு முதலிய பெரும் சுவாதீனம் கொண்ட தேசங்களில்கூட செய்து முடிக்கப்பட்டிராத மேற்படி சீர்திருத்தம் ருஷிய டூமா மெம்பர்களால் இவ்வளவு சுக்கிரமாகச் செய்து விடப்பட்டிருக்கிறது.

இது வரையிலும் ருஷிய ராஜாங்கமானது நடைபெற்று வந்த முறைமைகளுக்கு முற்றிலும் விரோதமான சீர்திருத்தங்கள் டூமாக்காரர்களால் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்து கொண்டு வரப்படுகின்றன. இதனால், ருஷியாவில் கொடுங்கொன்மைக் கக்ஷியாருக்கு டூமாவினிடம் கோபம் ஏற்பட்டு, டூமாவுக்கே சீக்கிரம் அழிவு ஏற்படும் என்று பல அறிஞர் நம்புகிறார்கள்.

டூமாவிலே கை வைப்பார்களானால் அதுவே ருஷிய சக்கரவர்த்தியின் கொடுங்கோன்மையும், அத் தேசத்து அநாகரிகமென்பதில் யாதொரு ஆக்ஷேபமுமில்லை.

இந்தியா - 07.07.1906

 
Website Designed by Bharathi Sangam, Thanjavur