மகாகவி பாரதியாரின்
கட்டுரைகள்
A
Stange Rumour
ஓர் ஆச்சரியமான வதந்தி
(சி.சுப்பிரமணிய
பாரதி)
ஸ்ரீ ரமேச
சந்திர தத்தர் இப்போது இங்கிலாந்துக்குப் போயிருக்கிறா ரென்ற
விஷயம் நமது நேயர்களுக் கெல்லாம் நன்கு தெரிந்ததே யாகும்.
இவர் ஏதோ தமது வேலையாகப் போயிருப்பதை அனுசரித்து பெங்காளி
ஜனங்கள் இவரைத் தமது பிரதிநிதியாக இருந்து பெங்காள மாகாணத்
துண்டிப்பின் அநீதியைப் பற்றிப் பிரிடிஷ் ஜனங்களுக்குத்
தக்கபடி போதனை புரியுமாறு கேட்டுக் கொண்டார்கள். இவரும்
அங்ஙனமே ஒப்புக் கொண்டு சென்றார்.
இப்போது வெகு ஆச்சரியமான வதந்தி யொன்று நமக்கு எட்டுகிறது.
ஆதாவது ஸ்ரீ ரமேச சந்திர தத்தர் இந்தியா மந்திரியின் கவுன்ஸிலில்
ஓர் ஸ்தானம் பெறப் போகிறார் என்பதேயாகும். இந்தியன் நாஷனல்
கங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்கி கவர்ன்மெண்டார் இந்தியா
மந்திரியின் சமையில் ஆர்.ஸி.தத்தரை எடுத்துக் கொள்ளப் போவதாக
அறிவிக்கப்படுகின்றது.
இந்த வதந்தி எவ்வளவு தூரம் மெய் யென்று இப்போது தெரிவிப்பது
சாத்தியமில்லை. இது மெய்யா யிருக்குமானால் மிஸ்டர் மார்லி
முழுதும் பித்துக் கொண்டு போய் விடவில்லை யென்று இந்தியா
ஜனங்கள் நம்புவார்கள். நமது இறுதியான நோக்கம் நிறைவேறுவது
மார்லி காலத்திலுமில்லை, இதுவரை விடப் பெரிய எவர் காலத்திலும்
நடக்காது. அது நாமாகவே செய்து கொள்ள வேண்டிய விஷயம். ஆனால்,
சிறுசிறு அனுகூலங்களாவது மார்லி செய்து கொடுப்பாரானால் இவருக்கு
நம்மவர் மிகுந்த நன்றி பாராட்டுவார்கள்.
இந்தியா
- 21.07.1906