மகாகவி பாரதியாரின் கட்டுரைகள்

A Madras Violinist in London
லண்டனிலே ஒரு சென்னை சங்கீத விற்பன்னர்
(சி.சுப்பிரமணிய பாரதி)

பியானோ, பிடில் என்ற இங்கிலீஷ் வாத்தியங்கள் வாசிப்பதில் பெருந் தேர்ச்சி பெற்றவரும், நமது நகரவாசியுமாகிய மிஸ்டர் துரைசாமி நெடுங்காலம் ஐரோப்பிய தேசங்களுக்குச் சென்று அரிய சங்கீத விற்பன்னரென்று புகழ் படைத்து இங்கே திரும்பி வந்தார்.

பிறகு சென்ற மே மாதம் அமெரிக்காவிலிருந்து இவருக்கு அழைப்பு வந்தபடியால் இங்கிருந்து புறப்பட்டவர், இப்பொழுது அமெரிக்காவுக்குச் செல்லும் மார்க்கத்தில் லண்டனிலே சென்று தங்கி யிருக்கிறார். அங்கே இவரது அற்புதமான திறமை தக்க பண்டிதர்களாலும், உயர்ந்த பத்திரிகைகளாலும் கொண்டாடப் பெற்று வருவதை யறிந்து மகிழ்ச்சி யடைகிறோம்.

அமெரிக்காவிலே, இவர் தக்க வரும்படியுடன் 6 மாத காலம் இருக்கும்படி ஏற்பாடா யிருக்கிறதென அறிகின்றோம்.

இந்திய சங்கீத சாஸ்திரத்திலே பெருங் கீர்த்தி பெற்றிருப்பதாகிய இம் மாகாணம் ஐரோப்பிய சங்கீதத்திலும் ஓர் தக்க வித்வானைப் பெற்றிருப்பது மிகவும் பெருமை யுறத்தக்க விஷயமேயாகும்.

இந்தியா - 04.08.1906

 
Website Designed by Bharathi Sangam, Thanjavur